உன்னிச்சை விவசாயிகளுக்கும், நீர்ப்பாசன அதிகாரிகளுக்குமிடையில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் கலந்துரையாடல்



உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்ட நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கும், பிரதேச விவசாயிகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டினைத் ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்ட பொறியியலாளர் எஸ்.ஜெயன் பார்த்தசாரதி தலைமையில் நீர்பாசனத் திணைக்களக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், நீர்ப்பாசனத் திணைக்கள மாட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம்.அசார், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்தவக் குழுத் தலைவர் கே.யோகவேள் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகள் வெள்ளம் காரணமாக அதிகளவில் திறக்கப்பட்டமையால் தங்களது வயல் நிலங்கள் பெருமளவில் அழிவடைந்தமை தொடர்பில் உன்னிச்சை விவசாயிகளுக்கும், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் முரண்பாடுகள் பல ஏற்பட்டு போராட்டங்கள் பலவும் இடம்பெற்றன. இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் முகமாகவும், எதிர்கால செயற்திட்டங்களை அதிகாரிகள் விவசாயிகள் இணைந்தே மேற்கொள்ள வேண்டும் என்பவற்றைக் கருத்திற் கொண்டும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர், திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் ஆகியோரின் முயற்சியால் மேற்படி கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் முரண்பாடுகள் இடம்பெற்ற தினத்தில் ஏற்பட்ட குளத்தின் நீர் மட்ட மாற்றங்கள், அதற்காக நீர்ப்பாசன அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்ட விதங்கள் போன்றன பற்றிய விளக்கவுரை நீர்பாசனப் பொறியியலாளாரால் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டப் பணிப்பாளரின் விளக்கவுரை இடம்பெற்று, பின்னர் திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவரின் இணக்கப்பாடான கருத்துரை இடம்பெற்றது. இறுதியில் மாவட்ட அரசாங்க அதிபரினால் மேற்படி விடயம் தொடர்பில் அதிகாரிகள் விவசாயிகளுக்கிடையிலான இணக்கபாடு மற்றும் ஒற்றுமை தொடர்பில் கருத்துக்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.