வறுமையை ஒழிக்க வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை ஒழிக்க வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.பட்டதாரிகளை உருவாக்குவதில் ஒவ்வொரு குடும்பமும் சிந்திக்கவேண்டும்.பெற்றோர்கள்  கல்வியில் மாற்றத்தை கொண்டு வருவதனால் அக்குடும்பம் முன்னேற்றமடையும்.அதனால் அக்குடும்பத்தின் வளர்ச்சி பாரியதொரு வளர்ச்சியாக காணப்படும் என பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில்  வருமானம் குறைந்த  59 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (28.6.2018) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் த.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கணக்காளர் வீ.வேல்ராஜசேகரம், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி எம்.தமயந்தி, சமுர்த்தி முகாமையாளர் திருமதி என்.கோள்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டு புலமைப் பரிசில் நிதிக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.
வருடந்தோறும் க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தமது கல்வி வளர்ச்சிக்காக சமுர்த்தி திணைக்களத்தினால் வழங்கப்படும் இப் புலமைப் பரிசில் திட்டத்தில், மண்முனை மேற்கு பிரதேசத்திலிருந்து 2018, 2019ஆம் ஆண்டுகளுக்காக 59 வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒரு மாணவருக்கு 24மாதக் கொடுப்பனவாக 36,000.00 (முப்பத்தாறாயிரம் ரூபாய்) பெறுமதியான புலமைப் பரிசில் இதன்போது வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசுகையில் :-நாட்டில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காரணமாக தமிழர்கள் கல்வியை இழக்க நேர்ந்துள்ளது.கல்வியை தமிழர்கள் படிக்கத்தவறியது மட்டுமல்ல யுத்தமும் தமிழர்களை படிக்கத்தவறியுள்ளது.இதனால் தமிழர்கள் கல்வியில் பாரிய பின்னடைவுகளையும்,பாதிப்புக்களையும் சந்தித்துள்ளார்கள்.கல்வியை இழந்துள்ளதால் தமிழர்கள் இன்று வறுமையாளர்களாக இருக்கின்றார்கள்.
இன்றைய தமிழ்மாணவ சமூகம் கடந்தகாலங்களில் ஏற்பட்ட வலியை உணர்ந்து கல்வியை தொடர்ச்சியாக கற்றுக்கொள்ள வேண்டும்.கல்வியை அக்கறையுடன் படித்து எமது சமூகத்தை முன்னேற்ற வேண்டும்.இன்றைய மாணவர்கள்தான் நாட்டின் நாளைய தலைவர்கள்.உணர்ந்து படிக்க வேண்டிய எண்ணம் ஒவ்வொரு தமிழர்களுக்கும் இருக்க வேண்டும்.உணராமல் படிப்பதால் தமிழர்களின் வாழ்வில் உயர்வை காணமுடியாது.எதிர்காலத்தில் எம்சமூகம் தலைநிமிர்ந்து வாழவேண்டுமானால் கல்வியில் சாதித்து காட்டவேண்டும்.தடைகளை உடைத்தெறிந்து சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.