தாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்ததன் காரணம் வெளியானது..! அதிகாரிகளின் கவனக்குறைவால் பரிதாபமாக பலியான தமிழ் மாணவனின் உயிர்!


கொழும்பு, தாமரைக்கோபுர வேலைத்தளத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே மாடியில் இருந்து விழுந்து கிளிநொச்சியைச் சேர்ந்த கோணேஸ்வரனின் உயிரிழந்திருப்பதாக கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், இங்குள்ள மின்தூக்கிகளுக்கருகில் செல்வதற்கான கதவுகளுக்கு பூட்டு இடப்பட்டிருக்கவில்லை. அப்பகுதியில் கடும் இருட்டாக இருப்பதாகவும் புதிதாக வேலைக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு இங்குள்ள கதவுகள் தொடர்பில் முறையாக தெளிவூட்டப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இருட்டில் வரும் புதியவர்கள் அறையென்று நினைத்து மின்தூக்கிக்குள் கால் வைத்து பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேவேளை குறித்த மாணவனது மரணம் தொடர்பில் அவரது நண்பர் சத்ய ரூபன் கருத்துத் தொரிவிக்கையில், “இறந்த கோணேஷ்வரன் எனது நண்பராவார். நாம் ஐவர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்தோம். நாம் பணிபுரியும் இடம் மோசமானது என கடந்த 5 ஆம் திகதி அவர் என்னிடம் கூறினார்.

மறுநாள் அவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கவில்லை. ஒருநாள் கழிந்து வேலைக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது. 8 ஆம் திகதி கடமைக்கு வந்த எம்மை ஒவ்வொரு இடத்தில் வேலைகளில் ஈடுபடுத்தினார்கள். நாளாந்தம் 1500 ரூபா சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம் 3 ஆயிரம் ரூபா கிடைக்கும்.

இங்கு பணிபுரியும் சீன நாட்டவர்கள் சண்டை சச்சரவுகளுக்கு வரமாட்டார்கள். இங்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. நண்பர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை.

எனக்கு குறுஞ்செய்தியொன்றை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதில் நண்பர் கோணேஸ்வரன் விழுந்து விட்டதாக அவர் அறிவித்திருந்தார். கோணேஸ்வரனின் தொலைபேசிக்கு அழைத்தாலும் அது செயலிழந்திருந்தது.

அவர் விழுந்திருந்த இடத்திற்கு சென்று பார்க்க நான் செல்லவில்லை. எனக்கு அவர் இருக்கும் கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.