மட்டக்களப்பு மாநகர சபையினால் PET பிளாஸ்டிக் போத்தல்களை விலைக்கு வாங்கும் திட்டம்


(சிவம்)

மட்டக்களப்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளில் PET பிளாஸ்டிக் போத்தல்களை தரம்பிரித்து மீள்சுழற்சிக்குட்படுத்தும் செயற்திட்டத்திற்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆசிய பவுண்டேன், பெய்ரா குறுப் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை என்பனவற்றினால் கைச்சாத்திட்ப்பட்டவுள்ளது.

இவ் ஒப்பந்தம் முலம்  மக்களிடமிருந்து குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை ஒரு கிலோ ரூபாய் இருபதிற்கு (20) விலைக்கு வாங்குவதற்காக திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த போத்தல்ளை சேகரிப்போரை ஊக்குவிக்கும் நோக்கொடு அவர்களுக்கு மேலதிகமாக ஊக்குவிப்புத் பணமும் வழங்கப்படவுள்ளது.

'வாழ்விற்கு திரும்பிக் கொடு' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மாநகர சபைகள் மற்றும் பியகம பிரதேச சபையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட குறித்த உள்ளுராட்சி மற்ற அங்கத்தினர்களுக்கான தெளிவுபடுத்தும் செயலமர்வு வெள்ளிக்கிழமை (01) கொக்கோ கோலா மென்பானங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பின்பு தொழிற்சாலை பார்வையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஹோரண ஏற்றுமதி செயல்முறை வலையத்தில் உள்ள பிளாஸ்டடிக் மீள்சுழற்சி தொழிற்சாலையின் செயல்முறைகள் கண்காணிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாநகர சபையிலிருந்து மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர உறுப்பினர் பா.குஜாஜினி, நிர்வாக உத்தியோகத்தர் வி.ரோகினி, முகாமைத்துவ உதவியாளர் மற்றும் சுகாதாரப் பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.