எங்கள் சமூகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை கூடிய கவனம் செலுத்த வேண்டும் - மட்டு அரசாங்க அதிபர்


(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்)
எமது சமூகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள்,மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தில் கடைமையாற்றுபவர்கள், கூடிய கவனம் செலுத்தி, அவர்களை சுயமாக தொழிற்படும் வகையிலும், சுயமாக உழைத்து முன்னேற்றமடையச் செய்யும் வகையில் அவர்களை தூண்டுதல் படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

சமூகசேவைகள் திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நாடாத்திய மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் வியாழக்கிழமை(12.7.2018) பிற்பகல் 3.00மணியளவில் வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து பேசுகையில் :-மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை பல்வேறு வழியாக அறிந்திருக்கின்றோம்.சமூகரீதியான செயற்பாடுகள் உள்ளிட்ட கலாச்சாரம், உற்பத்தி முயற்சி, பொருளாதார முயற்ச்சி, சுயதொழில் முயற்சி, தடகள விளையாட்டுக்கள் போன்றவற்றில் கூடிய கவனம் செலுத்தி செயற்படுவதை அறிந்திருக்கின்றேன், பார்த்திருக்கின்றேன். உங்களின் செயற்பாடுகளை நான் பாராட்டுகின்றேன். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8000க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். வருடாந்த கணக்கெடுப்புக்களில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது. இவ்வாறான மாற்றுத்திறனாளிகள் பிறப்பிலே இவ்வாறான நிலைக்கு உருவாக்கப்படுவது மாத்திரமல்ல இடைநடுவிலே வைத்தியத்திலே ஏற்படுகின்ற பிரச்சனை சம்பந்தமாகவும், அல்லது இடையிலே ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களினாலும் அவர்கள் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்படுகின்றார்கள். 

அதற்கு மேலதிகமாக நாளாந்தம் ஏற்படும் விபத்துக்களினால் அதிகமானவர்கள் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். பட்டிப்பளை பிரதேசத்தில் கடந்த மாதத்திலிருந்து இம்மாதம் வரையும் 12பேர் மாற்றுத்திறனாளிகாளாக மாற்றப்பட்டுள்ளார்கள். இது எமது சமூகத்தில் கவலையளிக்கும் விடயமாகும்.

எமது சமூகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி சம்பந்தமாக பிரதேச செயலாளர்கள்,அங்கு கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள்,சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள், சமூக நிறுவனங்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.அவர்களின் தேவைகள்,வசதி வாய்ப்புக்களை தங்குதடையின்றி நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.கிறிஸ்தவ வாலிப சங்கத்தினர் மாற்றுத்திறனாளிகளை வாழ்வோசை ஊடாக ஒன்றிணைத்து வலுவூட்டப்படுகின்றார்கள்.அவர்களின் எண்ணங்களையும்,சேவைகளையும் நான் பாராட்டுகின்றேன்.

இன்று ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மாற்றுத்திறனாளிகளை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவு வலுவூட்டல் செயற்பாடுகளுடன் அவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்தி சமூகத்தில் இணைக்கின்றார்கள்.விளையாட்டுப்போட்டி, கலை,கலாச்சாரத்தில் மாத்திரமல்ல வாழ்வாதாரத்திலும் உழைத்து முன்னேற்றுவதற்கும் அவர்களை வலுவூட்டல் செய்யப்பட்டுள்ளது.அவர்களின் வாழ்வினை வளப்படுத்த வழிகாட்டல்கள்,ஆலோசனைகள் வழங்க வேண்டும்.அவர்களும் எமது சமூகத்தின் பிரஜைகள் என்று உணர்ந்து செயற்படவேண்டும்.சுயமாக தொழில் செய்யும் அளவுக்கு அவர்களை தூண்டுதல் செய்யவேண்டும்.மாற்றுத்திறனாளிகளில் பலர் ஆசிரியர்களாகவும்,பட்டாதாரிகளாகவும்,அரச உத்தியோகஸ்தர்களாகவும், இலங்கை நிருவாக உத்தியோஸ்தர்களாகவும் எம்மத்தியில் மிளிர்கின்றார்கள்.அவர்களையும் எம் உறவுகள் போன்று மதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.