கல்முனை கடற்கரை பூங்காவிற்கு உயர் தரத்திலான சிறுவர் விளையாட்டு உபகரணங்கள்


(அகமட் எஸ். முகைடீன்)
பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் கல்முனை கடற்கரை பூங்கா வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி முழுமைப்படுத்தும் வகையில் அதற்கான சிறுவர் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்தல் மற்றும் பூங்காவின் கவர்ச்சிகரமான தோற்றப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.

பிரதி அமைச்சரின் இவ் விஜயத்தின்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். சத்தார், ஏ.எம். பைறூஸ், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், கல்முனை மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், கல்முனை கடற்கரை பூங்கா வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் ஒப்பந்தகார நிறுவனத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது எவ்விடத்தில் எவ்வாறான சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் குறித்த விளையாட்டு உபகரணங்களின் கொள்முதலின்போது உயரிய தரம் பேணப்படவேண்டுமென்றும் பிரதி அமைச்சரினால் அதிகாரிகள் தெளிவுறுத்தப்பட்டனர்.

மேலும் நீர் அலங்காரத் தடாகத்தின் அமைப்பு மற்றும் பழமையினை பிரதிபலிக்கும்வகையில் இலுக்கு புல் மற்றும் ஒலைக் கிடுகினாலான இளைப்பாறும் கொட்டில்களை அமைத்தல் மற்றும் இயற்கைத் தோற்றப்பாட்டை ஏற்படுத்தும்வகையில் தரைப்பகுதிக்கு புல்லிடுதல் போன்றவற்றினையும் உள்ளடக்கி வேலைத்திட்டத்தை பூரணப்படுத்துமாறு பிரதி அமைச்சர் ஒப்பந்தகார நிறுவன பிரதிநிதிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.