சிவானந்தா, விவேகானந்தா பழைய மாணவர்களினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல்

(செட்டிபாளையம் நிருபர்-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு சிவானந்தா, விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தினால் பொருளாதாரக்குறைவுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலை மாணவர்களின் கல்வி சார் நடவடிக்கைகளுக்காக ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் இவ் மாணவர் ஒன்றியத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.

இது தொடர்பான விசேட வைபவம் இவ் அமைப்பின் புலம்பெயர் நாடுகளின் கிளைத் தலைவர் தி.றோகான் தலைமையில் வெள்ளிக்கிழமை(20.7.2018) நடைபெற்றது.

இதன்போது இவ் அமைப்பின் உறுப்பினர்களின் தந்தையர்களினால் குறித்த இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.தி.றோகான் சிறப்புரையாற்றுகையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான எமது அமைப்பு பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றதாகவும், முழுக்க முழுக்க கல்வி சார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களின் அமைப்பு மட்டக்களப்புக்குள் குறிக்கப்பட்ட பகுதியில் தங்களின் சேவை இடம்பெற்றதாகவும்,அதனை இந்த ஆண்டு மட்டக்களப்பு மேற்கு வலய மாணவர்களுக்கும் இந்த உதவித்திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் சே.மகேந்திரகுமார் உரையாற்றுகையில் மட்டக்களப்பு மேற்கு வலய மாணவர்களது 2017ம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரணதர அடைவு மட்டத்தின் அடிப்படையில் 98ஆவது இடத்தில் இருந்த மேற்கு வலயம் தற்போது 93ஆவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் இதை விடவும் இவ்வலயத்தை கல்வியில் முன்னுக்குக் கொண்டுவர முடியும் எனக் குறிப்பிட்டார்.

இவ் வைபவத்தில் சிவானந்தா விவேகானந்தா மாணவர் அமைப்பின் செயலாளர் எஸ்.ரகுகரன்,பொருளாளர் கே.யசோதரன், மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.