புலிகளின் காலம் போல் இல்லை ; இன்று நாட்டில் குற்றச்செயலை தடுக்க மரணதண்டனை தேவை - ஞானமுத்து சிறிநேசன்


(வரதன்)
எமது எதிர்கால சமூகம் மிக மோசமான முறையில் சீரழிக்கப்பட்டு நடைப் பிணங்களாக ஆக்ககப்படுகின்ற ஒரு சூழ்நிலை இப்போது காணப்படுகின்றது. இன்று எமது நாட்டுக்கு எதிர்காலமே இல்லாத ஒரு சூழ்நிலை  இருக்கின்றபடியால், இப்படியாக போதைவஸ்துக்கள் மூலம் எமது சமூகத்தை அழிக்கின்றவர்களை நிச்சயமாக தண்டிக்க வேண்டும்.

இவ்வாறான கயவர்களுக்கு நிச்சயம் மரணதண்டனை அவசியமாகும்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார் இவ்வாறான போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சிறைச் சாலையில் இருந்துகொண்டே  போதைப்பொருள் வர்த்டதகத்தை மிகவும் லாபகரமாக நடத்திக்கொண்டு வருகின்றார்கள் என்றால் அவர்கள் திருந்துவதற்குரிய அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

இவர்கள் மீண்டும் மீண்டும் தவறினை செய்துகொண்டிருப்பதால் அவர்களுக்கு உச்சபட்சமான மரணதண்டனை வழங்கப்படும்போது அதனைப்பார்த்தாவது மற்றயவர்கள் திருந்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

போதைப்பொருட் கடத்தலில் ஈடுபட்ட மிகப் பிரபலியமான 19 சக்கரவத்திகள் இப்போது சிறையில் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அவர்கள் சிறைக் கூடத்தில் இருந்துகொண்டே தமது வியாபாரத்தை செய்துகொண்டிருக்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரை நானும் இரக்கம் காட்டுபவன், ஆனால் சமூகத்தை சீரழித்து நாட்டை குட்டிச்சுவராக மாற்றக்கூடிய மோசமான நபர்களுக்கு இரக்கம் காட்டாமல் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்.

இப்போது  அஸ்கிரிய பீடம், மல்வத்து பீடம் போன்ற பௌத்த அமைப்புக்கள் கூட இவ்வாறானவர்களுக்கு இரக்கத்தை காட்டக் கூடாது என கூறியிருக்கின்றது. போதைப் பொருட் கடத்தலுக்கு சில அரசியல்வாதிகள் கூட இயக்குனர்களாக இருக்கின்றார்கள் வெலே சுதா பிடிபட்டபோது ஒரு அரசியல்வாதியை கூறியிருக்கின்றார், எனவே கந்தையாவாக இருந்தாலென்ன, களுவண்டாசாக இருந்தாலென்ன, கனீபாவாக இருந்தாலென்ன இந்த வர்த்தகத்தில் யார் ஈடுபட்டாலும் உச்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கப்படவேண்டும்.

ஒரு காலத்தில் அதாவது விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இப்படியான போதைப்பொருள் கடத்தல் இருக்கவில்லை, சிறுவர் துஸ்பிரயோகம் இருக்கவில்லை, ஆவாக் குழுக்கள் இல்லை, கிறீஸ் மனிதர்கள் இல்லை இவ்வாறு பெரும் குற்றச் செயல்கள் நாட்டில் இருக்கவில்லை.இவ்வாறான செயல்களைச் செய்தால் பாரிய தண்டனை வழங்கப்படும் என்கின்ற அச்சத்தின் காரணமாக குற்றச் செயல்கள் நடைபெறவில்லை. எனத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் யுத்தக் குற்றச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தால்தான் அது சட்டவாட்சியாக அமையும். அவ்வாறில்லாமல் சட்டம் என்பது ஆட்களுக்கு ஏற்றவாறு அமையுமாகவிருந்தால் இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி, சட்டவாட்சி நடைபெறுகின்றதா என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் எழக் கூடியதாக இருக்கும்..அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால ஆட்சியில் வகை தொகையில்லாமல் ஊழல்கள் மோசடிகள், குற்றச் செயல்கள் அதாவது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருந்தன. நல்லாட்சியினை ஏற்படுத்துகின்றபோது சிறுபான்மை மக்கள், அது தமிழ் மக்களாயிருக்கலாம், முஸ்லிம் மக்களாயிருக்கலாம் மலையக மக்களாயிருக்கலாம் கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளை செய்தவர்கள் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள், மனித உரிமைகளை மிறியவர்களுக்கு தண்டனைகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தொடுதான் இந்த நல்லாட்சிக்கு வாக்களித்தார்கள்.

மக்கள் ஆணை என்பது ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் நாட்டின் சொத்தை சூறையாடியவர்கள் நாட்டு மக்களை பலிக்கடா வாகட்கியவர்கள் போன்றொருக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் இருந்தது.ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இவ் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை இற்றவரை அவர்கள் முன்று அண்டுகளை இவ் விடயத்தில் கடத்தியுள்ளார்கள்.

இனிவரும் காலத்திலாவது ஊழல் மோசடிகள்,லஞ்சங்கள், படுகொலைகள் போன்றவற்றை செய்தவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்காது விட்டால் நல்லாட்சி என்கின்ற சொல்லுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். ஆகையால் இருக்கின்ற இரண்டு வருடங்களில் விசேட நீதிமன்றங்களை அமைத்து இந்த யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், ஊழல் மோசடிகளை தாராளமாக செய்தவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நல்லாட்டி என்பது வெறுமனெ சொற்பிரயோகத்துடன் கூடிய ஆட்சியாக இருக்குமே தவிர அது செயற்பாட்டு ஆட்சியாக இருப்பதற்கு வாய்ப்பாக அமையாது.

 யுத்தக் குற்றவாளிகள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இந்த நாட்டில் வலம் வரக்கூடிய சூழ்நிலை இந்த நாட்டிலே காணப்படுமாகவிருந்தால் இந்த நாட்டிற்கே எதிர்காலம் இல்லாமல் போகும்.யுத்தக் குற்றச் செயலிலே ஈடுபட்டவர்கள் கூட இப்போது ஜனாதிபதி வேட்பாளர்களாக வருவதற்குக் கூட கொக்கரித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலை இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் நல்லாட்சியாக மாற்றம் ஏற்பட்டபோது குற்றவாளிகள் பலர் நாட்டைவிட்டு தப்பி ஓடினார்கள் என் என்றால் இந்த நல்லாட்சி தம்மை தண்டிக்கும் என்று.  இதில் அப்போதைய முன்னிலை அமைச்சர்களும் இருந்தார்கள்.

அதன்பின்னர் இந்த ஆட்சியானது இவர்களை தண்டிப்பதில் காட்டிய மெத்தனப் போக்கு காரணமாக தம்மை தண்டிக்க மாட்டார்கள் என்று மீண்டும் நாட்டுக்குள் வந்து கதாநாயகர்கள் போன்று இந்த நாட்டிலே ஒரு சூழ்நிலை உருவாக்கி யிருக்கின்றபடியால் இந்த நலமை நாட்டின் ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. எனவே நீதியமைச்சர் கூறியதுபோல் விசேட நீதிமன்றங்கள் அமைத்து இந்த குற்றவாளிகளின் குற்றங்களி வெளிக்கொண்டுவந்து அவர்களுக்கு தண்டனை வழங்கி அவர்களின் பொய் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சிக்கு எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் இருக்கின்றது.எனத் தெரிவித்தார்