நுண்கடன் அறவீட்டாளரின் அச்சுறுத்தலால் இளம் தாய் அலரி விதை உட்கொண்டு உயிரிழப்பு !


(கல்லடி நிருபர்-க. விஜயரெத்தினம்)
நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தல் காரணமாக இளம் தாய் ஒருவர் அலரிவிதை உட்கொண்டு இறந்துள்ளார். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பலவெளிக்கிராமத்தில் புதன்கிழமை (18.7.2018) இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவது யாதெனில், பலவெளிக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான நாகராசா-பிரசாந்தினி (வயது-24) என்பவரே நுண்கடன் பிரச்சனை சம்பந்தமாக அலரிவிதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு 7வயதில் ஆண் குழந்தை ஒன்றும்,10 மாதமான பெண் குழந்தையும் இருக்கின்றது. வறுமைப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இளந்தாய் மூன்றுக்கு மேற்பட்ட நுண்கடனை எடுத்துள்ளார். நுண்கடனை மீள செலுத்த முடியாமலும், நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் இத்தாய் விரக்தியடைந்தும், மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலே அலரிவிதைகளை சக்கரையுடன் புதன்கிழமை (18.7.2018) உட்கொண்டுள்ளார்.

அலரிவிதையை உட்கொண்டநிலையில் மீட்கப்பட்ட இளம்தாயை அயலவர்களின் உதவியுடன் மீட்டெடுத்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிசிச்சை பலனின்றி புதன்கிழமை காலை 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.நுண்கடன் சம்பந்தமாக சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மல்வத்தை உறுப்பினர் ஆர்.வளர்மதி அவர்கள் பிரதேச சபைக்கூட்டத்தில் நுண்கடனை சம்மாந்துறை பிரதேசத்தில் நிறுத்துமாறு விஷேட பிரேணையை முன்வைத்தார்.இதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்காதநிலையிலே இவ் இளந்தாய் உயிரிழந்தது பிரதேசத்தில் பாரியதொரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.