கல்முனையில் தமிழர் - முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து எதனையும் சாதிக்க முடியாது - பிரதி முதல்வர்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்-)

கல்முனையில் முஸ்லிம்கள் தமிழரை எதிர்த்தோ அல்லது தமிழர்கள் முஸ்லிம்களை எதிர்த்தோ எதனையும் சாதிக்க முடியாது என நல்லிணக்க ஒன்று கூடலில் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் தெரிவித்தாா்.

சமாதான மற்றும் சமூக அமைப்புடன் இணைந்து கல்முனை பிரதேச நல்லிணக்க போரம் ஏற்பாடு செய்த “நிலைபேறான நல்லிணக்கமும் சமாதானமும்” எனும் தலைப்பிலான விழிப்புணர்வு ஒன்றுகூடல் (06.06.2018) கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் எஸ்.கே.லவநாதன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

இங்கு உரையாற்றும் போதே பிரதி முதல்வார் இவ்வாறு தெரிவித்தாா் தொடர்ந்து உரையாற்றும் போது, மாற்று சமூகத்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வதற்கு முதலில் எங்களிடத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டும். கல்முனை மாநகர சபையை பெறுத்தளவில் எங்களுக்குள் நல்லிணக்கம் இருந்தால்தான் சபையின் செயற்பாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும். இருசமூகங்களும் ஒன்று பட்டால் தான் இதனை சாதிக்க முடியும்.

நாங்கள் ஒன்றுபட்டு இந்த மாநகர சபையின் கீழ் உள்ள மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் அது தான் என்னுடைய அவாவாக இருக்கின்றது. இங்கு எத்தனை பிரச்சினைகள் வந்த போதும் உறுப்பினர்களான நாங்கள் ஒருமித்து குரல் கொடுத்துவருகின்றோம் ஒற்றுமையாக செயற்படுகிறோம். நாங்கள் நாங்களாகத்தான் இருக்கின்றோம் மக்களுக்காக ஒருபோதும் தலைகுனிய மாட்டோம் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

கல்முனையில் முஸ்லிம்கள் தமிழரை எதிர்த்து ஏதாவது செய்யலாம் என்று நினைப்பதும் தமிழர்கள் முஸ்லிம்களை எதிர்த்து எதையாவது செய்ய நினைப்பதும் தவறாகும் என்றார்.

கல்முனை பிரதேசம் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாய் வாழும் பிரதேசமாகும். பல்லின மக்கள் வாழும் இப்பகுதியில் அவ்வப்போது இடம்பெறும் சிறு சிறு முரண்பாடுள் இன நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமைகின்றது. இதனை தடுக்கும் வகையில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதேசத்தில் எதிர்காலங்களில் பிரச்சினைகள் உருவாகக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை தடுக்கும் வகையில் நல்லிணக்க குழு அமைக்கப்பட்ட சுமுகமான சூழலை உருவாக்க செயற்படுவதும் இந்த போரத்தின் நோக்கமாகும் என இங்கு தெளிவுபடுத்தப்பட்டது. கடந்த காலங்களில் இவர்களால் முன்னேடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பற்றியும் விளக்கப்படுத்தப்பட்டது.

இதில் சமாதான மற்றும் சமூக அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஜெலீல், பிரதேச இணைப்பாளர் வி.தங்கவேல், அரசியல் கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மட்டத்தில் சேவையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.