பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்வதனாலேயே நல்லாட்சியை நடைமுறைப்படுத்த முடியும் - அலிசாஹிர் மௌலானா



நல்லாட்சி உண்மையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் பாதிக்கப்ட்ட மக்களுக்கான தேவையினை முன்னுரிமை கொடுத்து சேவை செய்ய வேண்டும். என்று  தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் செயிட் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாசிவன் தீவு கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ் தினேஸ் தலைமையில்  கலைமகள் முன்பள்ளி பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவிக்கையில் நாசீவன் தீவு கிராமத்தில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட வாழ்வாதார சுகாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே உங்கள் தேவைகளை முன்னிறுத்தி சேவை செய்ய நான் தயாராக இருக்கின்றேன்.

உங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதனால் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். வெறுமனே வாய்பேச்சில் நல்லிணக்கம் என்று பேசுவதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. நல்லிணக்கத்தினை நாம் சரியான முறையில் அமுல்படுத்த முடியும். அதற்கு இவ்வாறான இடங்களுக்கு நாம் விஜயம் மேற்கொள்ள வேண்டும்.

நல்லிணக்கத்தினை நாம் செயல்முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரதேச மக்கள் மற்றும் நாசிவன் தீவு சிவ வித்தியாலய அதிபர் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக மணலாக காணப்படும் பாடசாலை மைதானத்திற்கு 10மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து தருவதுடன் இங்குள்ள உள்ளுர் வீதிகளை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியிலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன் அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

அத்துடன் இப்பிரதேசத்திலுள்ள சுகாதார பிரச்சினையான மருத்துவ மனை அமைத்தல் மற்றும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்கு எடுத்தும் செல்லும் அவசர போக்குவரத்து சேவைக்காக அம்புலன்ஸ் வண்டியை பெற்றுத்தருவதற்கு சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து இப்பிரதேசத்தில் மக்கள் நிம்மதியாக வாழ வழியமைத்து கொடுப்பதாக அவர் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.