மட்டக்களப்பு மாநகர சபையின் 08வது அமர்வு


மட்டக்களப்பு மாநகர சபையின் 08வது அமர்வு இன்றைய தினம் (14) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது.

மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகரசபைச் செயலாளர் என்போர் இந்த அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது முதல்வரின் அறிவிப்புகள், நிதிக்குழுவின் சிபாரிசுகள், முதல்வரின் முன்மொழிவுகள் மற்றும் உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகள் என்பன சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது.

திண்மக்கழிவகற்றலுக்கான மேலதிக வாகனக் கொள்வனவு, வாகனங்கள் திருத்த வேலைகள், மாநகரசபை பாலர் பாடசாலைகளின் தரமுயர்வு, மட்டக்களப்பு மாநகரசபையை அழகுபடுத்துதல் திட்டத்திற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையிலுள்ள மாநகரசபையின் நிதியினைப் பயன்படுத்துதல், மாநகர சபை மேலதிக கடமை புரிந்த ஊழியர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவுகள் போன்ற பல முன்மொழிவுகள் நிதிக் குழுவின் சிபாரிசுகளில் முன்மொழியப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டது.

வட்டார ரீதியாக வாசிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பிலான முன்மொழிவு எடுத்துக் கொள்ளப்பட்ட போது புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரம், திராய்மடு 02ம் வட்டாரம், கருவப்பங்கேணி 06ம் வட்டாரம் ஆகிய வட்டார உறுப்பினர்களினால் வழங்கப்பட்ட வாசிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பான முன்மொழிவுகள் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவிற்கு மாநகர சபையில் உள்ள தீயணைப்புப் பயிற்சி பெற்ற உறுப்பினர்களை தியணைப்புப் பிரிவில் நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வீதிகளுக்கு பெயர்களை மாற்றுகின்ற விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவில் குழுவொன்று அமைக்கப்பட்டு அவ்வறிக்கையின் மூலம் இதனை நிவர்த்தி செய்யும் நடைமுறைகளை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பெயர்பலகைகளிலும் இடம்பெறுகின்ற தமிழ் எழுத்துப் பிழைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா தலைமையிலான குழுவொன்றும், அதே போன்று நுன்கடன் பிரச்சனை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மாநகர சபை உறுப்பினர் இரா.அசோக் தலைமையிலான குழுவொன்றும் சபையினால் நியமிக்கப்பட்டது.

அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது 800,000.00 ரூபாய்க்கு அதிகரித்த செயற்பாடுகளை திறந்த வெளிக் கேள்விகள் மூலம் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குவது தொடர்பில் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் மாநகரசபை உறுப்பினர்களின் பிரேரணைகளின் மாநகரசபைக் கடைகளை குத்தகைக்கு வழங்கும் போது மாநகர சபையை விட்டு வெளியில் கொடுக்காமல் மாநரசபை வரியிறுப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் மாநகரை சபை உறுப்பினர் சுரேஸ்குமார் அவர்களால் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபை அனுமதி வழங்கப்பட்டது.

இதன் போது மட்டக்கப்பு பேருந்து நிலைய கடைத் தொகுதிகள் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் மதன் அவர்களால் வினவப்பட்டபோது அதன் ஆய்வு அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சபையால் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் கலைக் குழுவில் மேலதிக உறுகப்பினர்களை இணைத்துக் கொள்வது தொடர்பிலான பிரேரணை மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா அவர்களால் கொண்டுவரப்பட்டது. இதற்கு சபை அனுமதி வழங்கியது. அத்துடன் மாநர வீதிகளை அகலமாக்கி அபிவிருத்தி செய்யும் போது வீதி மின் கம்பங்களையும் உரிய திணைக்களங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அதனையும் வீதியோரத்தில் அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற பிரேரணையும் சபையில் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் வெபர் விளையாட்டு மைதான உள்ளக விளையாட்டு அரங்கினை மக்களின் பாவனைக்கு கையளிப்பது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் மதன் அவர்களால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவு சபையில் அங்கீகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மஞ்சந்தொடுவாயில் அமைந்துள்ள காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெயரை மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையம் என பெயர் மாற்றம் செய்வது அல்லது பொலிஸ் நிலையத்தினை காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமைத்து அப்பெயரினையே வைத்துக்கொள்வது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் மதன் அவர்களால் கொண்டு வரப்பட்ட பிரேரணை சபையில் ஏற்றுகொள்ளப்பட்டு அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் மாநகரசபை உறுப்பினர் மதன் அவர்களின் மேலுமொரு வேண்டுகோளாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேச சபைகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் மின்விளக்குகள் வழங்கும் செயற்திட்டம் தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் பலரின் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகவும் நல்லெண்ண அடிப்படையில் தற்போது ஒரு பிரதேச சபையைத் தெரிவு செய்து அதற்கு குறிப்பிட்ட தொகை மின்குமிழ்கள் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் கடந்த சபை அமர்வின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட விளக்கமளித்தல் கடிதம் தொடர்பில் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களும் வாசிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கான தனிநபர் உரைகள் இடம்பெற்று இறுதியில் மாநகர சபை உறுப்பினர் வே.தவராஜா அவர்களினால் கொண்டுவரப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துதல் தொடர்பிலான முன்மொழிவினை சபை ஏற்றுக் கொண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு, மாநகரசபை உறுப்பினரால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து சபை முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.