எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரும் சந்திப்பு ! புதிதாக 1700 பட்டதாரிகளுக்கு நியமனம் !


கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையே நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் திருகோணமலையில் அமைந்துள்ள எதிர்கட்சி தலைவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, கிழக்கு மாகாணத்தினுடைய அபிவிருத்தி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்திட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்ததாக கிழக்கு மாகாண ஆளுநரும், எதிர்கட்சி தலைவரும் கலந்துரையாடலின் பின்னர் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

651 தொண்டராசிரியர்களுடைய பெயர் பட்டியல் சிபாரிசுடன் மத்திய அரசாங்கத்தின் அனுமதிக்காக அனுப்பப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கும், 351 டிப்ளோமா மாணவர்களுக்கும் தமது பதவி காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறுமைக்குற்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் 30 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக 300 மில்லியன் நிதி முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.