முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸவிடம் வாக்குமூலம்

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்சென்று சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், எதிர்வரும் 17 ஆம் திகதி வாக்குமூலமொன்றைப் பதிவு செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் காலை 10 மணியளவில் இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.



குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதிக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டும் அதற்கு பதிலளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால், சபாநாயகர் கரு ஜெயசூரியவினூடாக குற்றப்புலாய்வுத் திணைக்களத்துக்கு வாக்குமூலமொன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் உதவி வழங்கிய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மற்றும் மேஜர் பிரஹாத் ஶ்ரீ சீவலி புளத்வத்த ஆகிய இருவர் உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2008 மே மாதம் 22 ஆம் திகதி இரவு 11.39 மணியளவில் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டதுடன், சட்டவிரோதமாகத் தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.