விவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் - கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர்


மட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதை அறியத் தருமாறு அதிகாரிகளைக் கோரியுள்ளதாக மட்டக்களப்பு கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்  தெரிவித்தார்.

சமீபத்தில் மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த நீர்ப்பாசன அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை சந்தித்து கட்டுமுறிவு பிரதேசத்திலுள்ள சிறு குளங்களையும் பிரதான வாய்க்கால்களையும் நீரேந்தக் கூடியதாகவும் நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற வகையிலும் புனரமைப்புச் செய்து தருமாறும் பிரதேசத்திலுள்ள விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகள் நீண்ட காலமாக வெள்ளப்பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் புனரமைப்புச் செய்யப்படாமலும் உள்ளதால் அவற்றைத் திருத்தியமைத்துத் தருமாறும் வேண்டுகோள் விடுத்தோம்.

இவ்வேளையில், கதிரவெளி-கட்டுமுறிவு வீதி முற்றுமுழுவதுமாக திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக உயர் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

ஆயினும், சுமார் 18 கிலோமீற்றர் நீளமான அந்த வீதியின் சுமார் 5 கிலோமீற்றர் நீளமான பகுதியே திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஏனைய 13 கிலோமீற்றர் பெருநீளப் பகுதி நீண்ட காலமாகத் திருத்தியமைக்கடாமல் போக்குவரத்துச் செய்ய பொருத்தமற்ற நிலையில் காணப்படுகின்றது. எனினும், விவசாயிகள் வேறு வழியின்றி பெருஞ்சிரமத்திற்கு மத்தியில் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை, இவ்வீதி முழுமையாக சீர் செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது, ஆகையினால் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எத்தனை கிலோமீற்றர் வீதி செப்பனிடப்பட்டது என்பதை ஆதார ஆவணங்களோடு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டிருக்கின்றோம்.

இது விடயமாக விவரங்களைத் தருவதாக அதிகாரிகள் ஒப்புக் கொண்டு விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்' என்றார்.