பிள்ளையானை குறை கூற எந்த அரசியல் வாதிக்கும் அருகதை இல்லை - காந்தராஜா


கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மேற்கொண்ட அபிவிருத்தியை குறை கூற மட்டக்களப்பில் எந்த அரசியல் வாதிக்கும் அருகதை இல்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 8 வது சபை அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

தனது உரையில் மேலும் தெரிவி்கையில்

அண்மைக்காலமாக எமது கட்சியைப் பற்றியும் கட்சியின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியைப் பற்றியும் சில தரப்பினர் விமர்சித்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.

எமது மாநகரத்தைப் பொறுத்த வரையில் இம்மாநகரத்தின் முதல் முதல்வராக இருந்த சொல்லின் செல்வன் இராஜதுரை ஐயா அவர்களுக்குப் பின்னர் எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் முயற்சியினாலேயே அதிக அபிவிருத்தியை இந்த மாநகரம் கண்டுள்ளது.

அதன் காரணமாகவே எமது தலைவரை இந்த மாவட்டத்தின் மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர்.

அதன் வெளிப்பாடுதான் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமது கட்சிக்கு மக்கள் 43000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி மாவட்டத்தில் 36 ஆசனங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

எமது கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாது தற்போது நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் அரசியலில் இணைந்தவர்கள் எமது கட்சித் தலைவரை விமர்சிப்பது நகைப்பிற்குரிய விடமாகும்.

முடியுமாக இருந்தால் அவரை விமர்சிப்பவர்கள் இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கும், மக்களின் தேவைகள் எவ்வளவோ இருக்கிறது அவற்றினை நிவர்த்தி செய்து விட்டு விமர்சனங்களை முன்வைக்கட்டும்” என்றார்.