கல்முனையில் ஒரு அங்குல நிலம் கூட தனியாருக்கு தாரைவார்க்க இடமளிக்கப்பட மாட்டாது; முதல்வர் றகீப் உறுதி

(அஸ்லம் எஸ்.மௌலானா, ஏ.எல்.எம்.சினாஸ்)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட எந்தவொரு பிரதேசத்திலும் அரச காணிகளில் ஒரு அங்குல நிலம் கூட நியாயமான காரணங்கள், தேவைகள் இன்றி தனி நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ வழங்க அனுமதிக்கப்பட மாட்டாது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.



கல்முனை நகரில் பொதுப் போக்குவரத்துகளுக்கு இடைஞ்சலாக இருக்கின்ற சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸாக், முன்னாள் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் டாக்டர் ரி.நவரெட்ணராஜா ஆகியோர் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அரச காணிகள் தனி நபர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்ற விடயம் தொடர்பில் ஆராயப்பட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இஸ்லாமாபாத் பிரதேசத்தில் கோழி வளர்ப்புக்காக சங்கம் ஒன்றுக்கு கல்முனை பிரதேச செயலாளரினால் அரச காணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இக்கூட்டத்தில் கேள்விகளும் பலத்த கண்டனங்களும் எழுந்தன.

இதற்கு விளக்கமளித்த மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்; “கோழி மற்றும் காடை வளர்ப்பு திடத்திற்காக குறித்த சங்கத்திற்கு இக்காணியை ஒதுக்கீடு செய்யுமாறு அம்பாறை கச்சேரி காணிப் பிரிவினால் அறிவுறுத்தல் வந்தபோதிலும் எமது கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறித்த திட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின்னரே அது தொடர்பில் தீர்மானிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

எம்மைப் பொறுத்தவரை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட எந்தவொரு பிரதேசத்திலும் அரச காணிகளில் ஒரு அங்குல நிலம் கூட நியாயமான காரணங்கள், தேவைகள் இன்றி தனி நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ வழங்க அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

அதேவேளை பல இடங்களிலும் அரச காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது பெரும் சவாலாக இருந்து வருகின்றது. மருதமுனையிலும் அரச காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

அரச காணிப் பயன்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் போது தமிழ் பிரதேச செயலாளரும் அழைக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர்களினால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கல்முனை வாடி வீட்டு வீதியிலுள்ள குருந்தியடி பகுதியில் இரண்டு ஏக்கர் காணியை விசேட அதிரடிப் படை முகாம் அமைப்பதற்கு வழங்குமாறு காணி ஆணையாளரினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் அக்காணியை ஆதார வைத்தியசாலையின் தேவைக்கே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் கே.சிவலிங்கம், இப்பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் முகாம்கள் இருக்கும்போது இன்னும் எதற்கு விசேட அதிரடிப்படை முகாம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேள்வியெழுப்பினார்.

எமது மக்களின் பாதுகாப்புக்கே விசேட அதிரடிப் படையினர் இங்கிருக்கின்றனர். அவர்களை வெளியேற்ற முயற்சிப்பதோ, அவர்களுக்கு காணி வழங்க மறுப்பதோ மிகவும் பாரதூரமான விடயமாகும் என்று இங்கு சுட்டிக்காட்டிய கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், ஆகையினால் குருந்தியடி காணியை கட்டாயம் படையினருக்கு வழங்குமாறு வலியுறுத்தினார். இதன்போது இவரது இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

அக்காணியை ஆதார வைத்தியசாலையின் தேவைக்கு பயன்படுத்துவது என தீர்க்கமான முடிவொன்று இருப்பதனால் நீலாவணை கடற்கரை பகுதியிலுள்ள காணி ஒன்றை வழங்குவோம் என மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.



இவ்வாறு பலதரப்பட்ட முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கருத்து தெரிவிக்கையில்;

“கல்முனைப் பகுதியில் தற்போது சட்ட விரோத செயற்பாடுகளும் போதைப்பொருள் பாவனையும் விற்பனையும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளும் கடலோர கடத்தல் உட்பட வேறு பல குற்றச் செயல்களும் அதிகரித்திருப்பதால் அவற்றைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் விசேட அதிரடிப்படையினரின் கடமையாகும். அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அவர்களது படை முகாமை அமைப்பதற்கு காணியொன்று வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

ஆகையினால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஓர் இடத்தில் பொருத்தமான காணியொன்றை அடையாளம் கண்டு வழங்குவது எனவும் குருந்தியடி காணியை வைத்தியசாலையின் தேவைக்கு பயன்படுத்துவது எனவும் இப்பிரதேச ஒருங்கிணைப்பு குழு தீர்மானிப்பதாக இதன்போது அறிவித்த கோடீஸ்வரன் எம்.பி., சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இத்தீர்மானங்களை அறிவிக்குமாறும் பிரதேச செயலாளரை கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் அரச திணைக்களங்கள் சார்பான உத்தியோகத்தர்களும் பொலிஸ் மற்றும் படை அதிகாரிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.