கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதில் பற்றுறுதியுடைய ஒரு அரச நிருவாக அதிகாரியையே இன்று காரைதீவு மக்கள் பெற்றுள்ளனர் – ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர்.


சைவமும் தமிழும் தழைத்தோங்க தரணியில் வந்துதித்த பெருமகன் சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு பிரதேசத்தின் புதிய சிவில் நிருவாக அதிகாரியாக எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமான ஒரு விடயமாகும். ஏனெனில் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பதோடு மட்டுமல்லாது இந்து சமயக் கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த பற்றுறுதியுடையவரான அவர் காரைதீவு பிரதேசத்தின் தமிழர் கலாசார நியமங்களைக் காக்கும் கடமைகளை கரிசனையோடு முன்னெடுக்கக்கூடியவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் குறிப்பிட்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடந்த 9 வருடங்கள் கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸனின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் இருந்து இடமாற்றம் பெற்றுவரும் புதிய பிரதேச செயலாளர் கந்தையா லவநாதனை வரவேற்கும் நிகழ்வும் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் நேற்று (15) இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுவாமி விபுலானந்தர் தமிழுக்கும் சைவசமயத்துக்கும் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளை அவரின் அடியையொற்றி அப்பழுக்கின்றி ஆத்மார்த்தமாக முன்னெடுத்துவரும் காரைதீவுப் பிரதேச மக்கள் இனி அப்பிரதேசத்தின் புதிய நிருவாக அதிகாரியாக வந்துள்ள எமது பிரதேச செயலாளரின் உதவியோடும் புதிய உத்வேகத்தோடும் முன்னெடுக்கக்கூடிய காலம் கனிந்துள்ளமை கண்கூடாகும் எனத் தெரிவித்த அவர், ஒரு நிருவாக சேவை அதிகாரியின் கடமை, பொறுப்புக்கள், அதிகார எல்லைகள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத சில விசமிகள் வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களை முன்வைக்கத் திராணியற்று முகமூடியணிந்து தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு சமுக வலைத்தளங்களில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கெதிராகப் பரப்பி வந்த ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களின் விளைவாகவே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக இன்று வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆயினும் 15 வருட அரச நிருவாகத் திறன் மற்றும் ஆளுமையைக் கொண்ட ஒருவராக மட்டுமல்லாது, இலங்கை நிருவாக சேவையின் முதலாம் வகுப்பு விசேட தரத்தைக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த அரச அதிகாரியின் சேவை இனி ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு கிடைக்கமுடியாது போவதையிட்டு ஒரு கணமேனும் சிந்திக்காது போலி முகநூல் கணக்குகளில் ஒழிந்துகொண்டு கூக்குரலிடுகின்றனர். இன்னும் ஓரிரு வருடங்களில் அவர் இந்த மாவட்டத்தின் அரச அதிபராகவோ அல்லது அரச அமைச்சுக்களில் ஒன்றின் கௌரவ செயலாளராகவோ, ஆணையாளராகவோ, பணிப்பளராகவோ பதவி உயர்வு பெற்றுச் செல்லவிருப்பது பற்றி இதுவரை சிந்திக்காதிருப்பது அவர்களின் அறியாமையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

குறித்த நபர்கள் பரப்பி வந்த ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களின் விளைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பின் கடந்த 9 மாதங்களாக நிரந்தர பிரதேச செயலாளரின்றி இயங்கிய காரைதீவு பிரதேச செயலகத்துக்கு அவர் நியமிக்கப்பட்டிருக்காது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என்ற விடயத்தைக் கூட விளங்கிக்கொள்ள முடியாத நிலையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிலரைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொண்டிருக்காது தற்போது எமக்குக் கிடைத்திருக்கும் புதிய பிரதேச செயலாளருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இப்பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட உதவ வேண்டியது ஆலையடிவேம்பு பிரதேச அரச உத்தியோகத்தர்களாகிய எம் அனைவரதும் தலையாய கடமையாகும் எனவும் உதவி பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அங்கு குறிப்பிட்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் இரு பிரதேச செயலாளர்களும் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் உதவி பிரதேச செயலாளரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் புதிய பிரதேச செயலாளர் கே.லவநாதன் இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் உதவி பிரதேச செயலாளரால் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து புதிய பிரதேச செயலாளர் கே.லாவனாதனின் கன்னி உரை அங்கு இடம்பெற்றதன் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனைப் பாராட்டிக் கௌரவித்து உரையாற்றினர்.

இறுதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கணக்காளர் க.கேசகனினால் இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், உதவி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச ஆகியோரினால் மாலை அணிவிக்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டார்.

நிறைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த நினைவுப் பரிசினை இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் ஜெகதீஸனுக்கு நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் வழங்கி வைத்ததுடன் பிரதேச செயலாளரின் நெகிழ்ச்சியான ஏற்புரையுடன் நிகழ்வு இனிது நிறைவுற்றது.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு, காரைதீவு, கல்முனை தமிழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர்.