மட்டக்களப்பில் சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தல் கட்டுப்படுத்தல் திட்ட நிறைவும்


அம்கோர் நிறுவனத்தினால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தலும்  திட்டத்தின் நிறைவு தொடர்பான கருத்தரங்கும், அடைவுகள் மற்றும் படிப்பினைகளைப் பகிர்தலும் மட்டக்களப்பில் நடைபெற்றது.

அம்கோர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ப. முரளிதரன் தலைமையில நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், அவஸ்திரேலிய உயர்தானிகராலயத்தின் திட்ட அதிகாரி எஸ். கசன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.

2015 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது மூன்று வருட காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதனூடாக அவர்களை சமூக பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்காக வாழ்வாதார உதவிகள் மற்றும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இந்த பெண்கள் சுய உதவிக் குழுக்கள் வாராந்த குழுச்செயற்பாடுகள் மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். குழு சேமிப்பினூடாக பெண்கள் சுழற்சி முறையில் கடன்களை பெற்று வாழ்வாதார,  தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். இதனால் இந்த குடும்பங்கள் பாதுகாப்பற்ற நுண்கடன் நிதி திட்டங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன் தமது சமூகத்தின் நிதிவளத்தினை மேம்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கின்றார்கள்.

அம்கோர் நிறுவனத்தின் இத்திட்டத்தினூடாக களுவாஞ்சிக்குடி, செங்கலடி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 914 குடும்பங்கள் 90 குழுக்களாக உருவாக்கப்பட்டு பயன்பெற்றுவருகின்றார்கள். இந்த திட்டத்தின் திட்ட முடிவுக் கருத்தரங்கும், அடைவுகள் மற்றும் படிப்பினைகளைப் பகிர்தலும் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பிரதேச செயலாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தகள் திட்டத்தின் பயனாளிகளான பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற நுண்கடன் நிதி திட்டங்களினால் ஏற்படுகின்ற சமூக பிரச்சனைகளிருந்து எதிர்காலத்தில் மக்களை  எவ்வாறு பாதுகாப்பு தொடர்பான பல பரிந்துரைகள் அம்கோர் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் நுண்கடன் பாதிப்புகள் தொடர்பான விழிப்பூட்டல் வீதி நாடகமொன்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டது.