தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும்போது இனவாதிகளாக சித்தரிக்கின்றனர் - யோகேஸ்வரன்


தமிழ் மக்களின் வளங்களை சுரண்டும் வகையிலான தொழிற்சாலைகளை கொண்டுவந்துவிட்டு அதனைத் தடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடும்போது எங்களை இனவாதிகளாக சித்தரிக்கிறார்கள் எமது மக்களின் விருப்பத்திற்கு மாறான எந்த திட்டத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைமுறைப்படுத்த இடமளிக்காது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் வியாழக்கிழமை (09) பெரியபுல்லுமலையில் எதிர்ப்புப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - தமிழ் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அந்த பிரச்சினைகளை கட்சி ரீதியாகப் பார்க்காமல் எமது இனம் சார்ந்து அனைவரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்.

குடிநீருக்கே மக்கள் தவிர்க்கும் பகுதியிலிருந்து நீரை ஊறுஞ்சி போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் செயற்பாட்டினை யாராக இரு;நதாலம் அனுமதிக்க முடியாது.

உன்னிச்சைக் குளத்திலிருந்து பெறப்படும் நீர் நகரப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது குளத்தினை அண்டியுள்ள மக்கள் குடி நீருக்கு பிரதேச சபை பவுசர்களை நம்பி வாழ்கின்றனர்.

இந்த நிலையில் பெரிய புல்லுமலையில் போத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் ஒரு போதும் அனமதிக்க மாட்டோம்.

இந்தவிடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பல நடடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.  கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக அடியேன் கருத்து தெரிவித்த போது காத்தான்குடியைச் சேர்ந்த அரசியல்வாதி எங்களை இனவாதியாகச் சித்தரிக்கிறார்.

இந்த பகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் உறுகாமத்தில் முஸ்லிம் மக்களும் மங்களஹமயில் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதனால் எதிர்காலத்தில் மூவின மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கையெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையின் கட்டட அனுமதியை ரத்துச் செய்ய உடனடியாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் பிரரேரணை கொண்டுவரவேண்டும் இதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். 

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளரை உருவாக்குவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கியுள்ளது. அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவாக இருப்பதால இந்த தொழிற்சாலைக்கு ஆதரவாகச் செயற்படுவாராக இருந்தால் அவரது தவிசாளர் பதவியிலிருந்து நீங்குவதற்கும் எங்களால் முடியும்.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் இந்த தொழிற்சாலைக்காக வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்துவதற்கு நடவடிக்யெடுக்க வேண்டும்.  வியாபாரச் சான்றிதழ் வழங்க கூடாது. இந்த பிரதேச மக்கள் விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு செயற்பாட்டினையும் பிரதேச சபை முன்னெடுக்க கூடாது' என்றார்.