மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் விழாக்கோலம் பூண்ட சுவாமி விவேகானந்தரின் 125வது ஆண்டு சிகாகோ சொற்பொழிவு ஞாபகார்த்த நிகழ்வுகள்



வேதாந்த ஞானியாம் சுவாமி விவேகானந்தர் 1893 செப்டெம்பர் 11 நாள் அமெரிக்காவின் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் ஆற்றிய சொற்பொழிவின் 125வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வுகள், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக் ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்களின் தலைமையில் கடந்த 11ம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 6 மணி வரை மிகவும் கோலாகலமாக நடந்தேறியது. 

சுமார் 400 க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்வில் சுவாமிகளின் சிகாகோ சொற்பொழிவு உரை வாசிக்கப்பட்டதோடு சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் பக்தர்களின் மனதை வலுப்படுத்தியது. 

மேலும் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகளும் பக்தர்களின் மனதை வயப்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக சுவாமிகளின் சிகாகோ உரையை மையப்படுத்திய குறுந்திரைப்படமும் காண்பிக்கப்பட்டது. இது பக்தர்களுக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்திருந்தது. 

இறுதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக் ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்களின் உரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது.  

தொடர்ச்சியாக இந்நிகழ்வுகள் பல பாடசாலைகளில் நடைபெற திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

"மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி" 

சுவாமி விவேகானந்தர்


தகவல்
இராமகிருஷ்ண மிஷன் பழைய மாணவர்கள்