தலைவர் அஷ்ரஃபின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள்.

(அகமட் எஸ். முகைடீன்)

இந்நாட்டின் தேசிய நலனுக்காக பெரும் பங்காற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரஃப் அவர்களின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க பாராளுமன்றமும், பாராளுமன்றம் நிராகரித்துள்ள மாகாண சபை திருத்தச் சட்ட மூலத்தை நிராகரித்து பழைய தேர்தல் சட்டத்தை கொண்டுவருவதற்கு பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று (19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் குடியியல் வான் செலவுகள் ஒழுக்க விதிகள் தொடர்பான விவாதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறித்த வேண்டுகோளை விடுத்தார்.  


பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் மரணித்து இவ்வருடத்துடன் 18 வருடங்களாகின்றன. அவர் இந்த நாட்டில் யுத்தம் மிகக் கொடூரமாக இருந்த காலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை உருவாக்கி யுத்த காலத்தில் முஸ்லிம் இளைஞர்களை ஜனனாயக பாதையின் கட்டுக்குள் கொண்டுவந்து நாட்டில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்காக பெரும் பாடுபட்ட ஒரு தலைவராவார். 

பாராளுமன்றத்தில் பெரும்பாலான விவாதங்களில் பங்குகொண்டு இந்நாட்டின் தேசிய நலனுக்காக பெரும் பங்காற்றினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சி மலர் வதற்கு உறுதுணையாக இருந்தார். அவ்வாட்சிக் காலத்தில் மரணிக்கும்வரை அமைச்சராகவிருந்து நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகவும் நலனிற்காகவும் பாடுபட்டு சமாதானத்தை உருவாக்குவதற்கு பங்காற்றியவராவார். 

பாராளுமன்றத்திலே அவருடைய பங்களிப்பு எவ்வாறாக இருந்தது என்பதை அனைவரும் அறிவோம். புதிய அரசயிலமைப்பை கொண்டுவருவதற்காக 2000 ஆண்டு மூன்று மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் பேசி சாதனை படைத்தார். 
அஷ்ரஃப் இலங்கை அரசியலில் ஒரு கிங் மேக்கராக இருந்தார், இவ்வாறான ஒருவரை கௌரவப்படுத்துவதற்காக இந்த சபை கடமைப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் பாராளுமன்றத்தில் அவருடைய புகைப்படத்தை திரைநீக்கம் செய்வதற்கு இப்பாராளுமன்றம் குறிப்பாக சபாநாயகர் அவர்கள் முன்வரவேண்டுமென கோரிக்கை விடுத்தார். 

இந்நாட்டில் தற்போது விவாதமாக பேசப்படுகின்ற விடயமாக மாகாண சபைகள் திருத்தச் சட்டம் காணப்படுகிறது. ஒட்டுமொத்த சபையும் திருத்தச் சட்ட புதிய தேர்தல் முறைமையை முழுமையாக நிராகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் அவர்கள் பழைய தேர்தல் சட்டத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். பழைய தேர்தல் முறையினை கொண்டுவருவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து பாராளுமன்றம் நிராகரித்துள்ள சட்ட மூலத்தை நிராகரித்து பழைய தேர்தல் முறைக்கு போகப்போகின்றோம் என்ற அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை பிரதமர் அவர்கள் விடுக்க வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார்.