Sunday, September 16, 2018

முதலைகளினால் கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள் ..!!!

ads

(க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மாகாணமாக திகழ்கின்றது. இம்மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு மட்டுமல்ல விவசாயம், நன்னீர் மீன்பிடியை பிரதான தொழிலாளாக கொண்டு தங்களது ஜீவனோபாயத்தை இங்குள்ள மக்கள் வாழ்வாதாரமாக்கிக் கொண்டு வாழ்கின்றார்கள். சுற்றுலாத்துறைக்கு பெயர்போன கிழக்கு மாகாணம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும், புலம்பெயர்ந்த மக்களையும், எம்நாட்டு மக்களையும் கவர்ந்திழுக்கும் பிரதேசமாக காணப்படுகின்றது.
கிண்ணியா, அறுகம்பை, பாசிக்குடா, சின்ன உல்லை, பொத்துவில், உன்னிச்சை குளம், பாசிக்குடா, மட்டக்களப்பு வாவி, போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்திழுக்கும் இடங்களாகக் காணப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகளின் ஈர்ப்புக்கு பெரிதும் காரணம் நீர்நிலைகளே ஆகும். எனவே கிழக்கு மாகாணத்தின் ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் பெருமளவு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை காண முடிகிறது.

இன்று கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் காட்டு யானைகளின் தாக்குதல்களினாலும், முதலை கடியினாலும் மரணித்து கொண்டிருக்கின்றார்கள். இச்சம்பவங்கள் எல்லோரையும் கிலிகொள்ளச் செய்துள்ளது.தமது ஜீவனோபாயத்தை ஈட்டிக்கொள்வதற்காக தொடர்ச்சியாக முதலையுடன் நன்னீர் மீனவர்கள் போராட வேண்டியுள்ளது. யுத்தத்தினால் அதிகமான இழப்புக்களை சந்தித்த கிழக்கு மக்களை முதலைகளும் விட்டு வைக்கவில்லை என்பதை நாளாந்த சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது. கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களை தொடர்ச்சியாக வன விலங்குகள் தாக்கி வருகின்றன. அண்மைக்காலமாக முதலையாலும் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

யானை தாக்கி மரணிப்பதுபோல் முதலையும் இங்குள்ள மீனவர்களை கடித்து குதறி உயிரிழக்கச் செய்கிறது. எனினும் முதலைக்கடி சம்பந்தமாக இதுவரையும் சரியான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவே இவ் விடயத்தை சற்று ஆழமாக பார்க்க வேண்டியதாகவுள்ளது.

இங்குள்ள வறுமைப்பட்ட மக்களின் பிரதான தொழில் நன்னீர் மீன்பிடியே ஆகும். அதனையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டு அவர்கள் கிழக்கு மண்ணிலே வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு மீன்பிடித்தொழிலைச் செய்வோர் முதலைகளின் பெருக்கத்தினாலும், நீர்நிலைகளில் முதலைகளின் நடமாட்டங்களினாலும் தமது மீன்பிடித்தொழிலை முன்னெடுக்க முடியாதவர்களாக உள்ளனர்.நுண்கடனையும் மீளச் செலுத்த வேண்டுமாயின் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடவேண்டும். அதேபோன்று வறுமையில் இருக்கும் மக்களுக்கு பொருளாதாரம் தேவையென்றால் மீன் பிடித்தலைத் தொடர்ந்தேயாக வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் கிட்டங்கி, அன்னமலை, மாவடிப்பள்ளி, இறக்காமம், சின்ன முகத்துவாரம், சாகாமக்குளம், கஞ்சி குடிச்சாறு, தாமரைக்குளம், பொத்துவில் களப்புக்கள் போன்ற இடங்களிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு பாலம், குறுமண்வெளி, மகிழூர், மண்டூர், துறைநீலாவணை, களுவாஞ்சிகுடி, களுதாவளை, பழுகாமம், குருக்கள் மடம், தாழங்குடா, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர்ப்புற வாவிகள்,

வவுணதீவு, சொறுவாமுனை ஆறு, கித்துள்குளம், வாழைச்சேனை ஆறு, தோணிதாண்டமடு, சந்தனமடு, வாகனேரி போன்ற வாவிகளிலும், குளங்களிலும் திருகோணமலை வெருகல் ஆறு, கிளிவெட்டி, மூதூர் ஆறு போன்ற பகுதிகளிலும், வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பலர் முதலைக்கடிக்குள்ளாகி உயிரிழந்தும், காயப்பட்டுமுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.நிலைமை இவ்வாறிருக்கின்ற போதிலும், ஆறுகளிலும், குளங்களிலும், நீர்நிலைகளிலும் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள், எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதலை அபாயம் தெரியாமல் மீனவர்களும், சுற்றுலாப்பயணிகளும் வாவிகளிலும், குளங்களிலும் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.வளைவுகள் இருக்கும் இடங்களில் ‘மெதுவாக செல்லுங்கள், அபாயகரமான வளைவுகள்’ எனச் சாலையோரமாக எச்சரிக்கை பலகை வைத்திருப்பார்கள். பாதை மோசமாக இருந்தால் ​மெதுவாக செல்லுங்கள் என்று ஒரு பலகை அறிவுறுத்தும். இவை எல்லாம் அபாயங்களைத் தவிர்ப்பதற்காகத்தான். அதுபோலத்தான் கடற்கரைகளிலும் 'குளிப்பதற்கான இடம் அல்ல' என்று எச்சரிக்கைப் பலகை வைத்திருப்பார்கள். ஆனால், முதலைகள் நடமாட்டம் ஆபத்து’ என்ற பலகைகள் ஏன் கிழக்கு நீர்நிலைகளில் வைக்கப்படுவதில்லை என்பதுதான் கேள்வி!

அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் பொத்துவில் ஆற்றில் இறங்கியபோது முதலைக் கடிக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழப்புக்கு காரணம் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் பற்றியதும், அனர்த்தம் பற்றிய அறிவுறுத்துதல் பலகை, வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான். இதனால் கிழக்கு இலங்கைக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது.

இதேபோன்று நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் முதலைக் கடிக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். குறுமண்வெளி, மகிழூர், தம்பலவத்தை, களுவாஞ்சி குடி, துறைநீலாவணை, சாகாமம், பொத்துவில், வாகனேரி, ஆரையம்பதி, கல்லடி, வாழைச்சேனை, விளாவெட்டுவான், மண்டூர், கிளிவெட்டி, கந்தளாய் போன்ற பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.இதேவேளை கடந்த வருடம் கைகழுவச் சென்றபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் பொத்துவில் பானமையில் மீட்கப்பட்டது. போல் ஸ்டுவாட் மக்லன் (வயது 24) என்ற பிரித்தானிய ஊடகவியலாளரே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

நண்பர்களுடன் பொத்துவில் கோட்டக்கல்லி கடற்பகுதிக்குக் நீராடச் சென்றிருந்த அவர், முதலைக் குன்று என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் கைகழுவச் சென்றபோது, அவரை முதலை இழுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினர் மற்றும் பானம பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் பின்னரே, அவருடைய சடலம் மீட்கப்பட்டது. இதேவேளை களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்குளத்தில் கைகழுவச் சென்ற பொறியியலாளர் ஒருவர் முதலையினால் பிடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழப்புக்கள் ஏற்படுவது பற்றி வனஜீவராசிகள் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் விழிப்புடன் செயற்படவேண்டும். முதலைகளின் நடமாட்டம், முதலைகளின் பெருக்கமுள்ள பகுதிகளை நன்கு இனங்கண்டு அவ்வாறான இடங்களில் அனர்த்தம் சம்பந்தமாக விழிப்புணர்வு பலகை அல்லது பாதாதை வைக்க வேண்டியது அவர்களின் கடமை அல்லவா? முதலைக்கடி சம்பந்தமாக உரிய திணைக்களம் இறப்புக்கள், காயங்கள் சம்பந்தமாக பதிவுகளை மேற்கொள்ளவேண்டும். முதலையினால் இழப்புக்களையும், காயங்களையும் ஏற்படும் குடும்பங்களுக்கும், மீனவர்களுக்கும் நிவாரணங்கள், சிசிச்சைகள் வழங்க வேண்டும்.

அவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகள், வசதிகளை மனமுவந்து உரிய திணைக்களம் செய்து கொடுக்கவேண்டும்.

தற்போது வறட்சிக் காலம் என்பதால் நீர்நிலைகளின் நீர் வற்றியுள்ளது. இதனால் வாவிகளில், குளங்களில் நுழைவோரை தடுப்பதற்கும் ஊடகங்களில் போதியளவு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களினால் கட்டடங்கள், கழிவுகள் என்பன வாவிக்குள் காணப்படுவதானால் வாவிகளை சுத்தப்படுத்தி ஆழமாக்க வேண்டும். அகலப்படுத்த வேண்டும். சிறுவர்கள், பெரியவர்கள், மீனவர்கள் மத்தியில் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகளிலும் முதலைகளின் நடமாட்டம், பெருக்கமுள்ள இடங்களையும், ஆறுகளையும் தெரியப்படுத்தி முதலைக் கடியிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலை நடமாட்டம் உள்ள பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவோரை தடுப்பதற்கு விழிப்புக்குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்படுத்தி மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

முதலைக் கடிக்குள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிசிச்சைகள் பற்றியும், அவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் மீனவர்கள், மக்கள் மத்தியில் போதியளவு தெளிவு இல்லை. இதனையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்பூட்ட வேண்டும். மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்ட குடும்பங்களுக்கு முதலையினால் சேதமாக்கப்படும் மீன்பிடி உபகரணங்களை நன்னீர் மீன்பிடி திணைக்களம், வனபரிபாலன திணைக்களம் என்பன அரசிடம் இருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும். வறட்சி காரணமாக வற்றிப்போகும் குளங்களை ஆழமாக்க வேண்டும்.

வெள்ள காலங்களில் வாவிகளில் காணப்படும் முதலைகள் நீரேந்து பிரதேசங்கள், தீர்த்தோற்சவம் நடைபெறும் தீர்த்தக்குளங்கள், மீன்வளர்ப்புள்ள சிறிய குளங்களில் சென்று மீண்டும் வாவிக்குள் போகமுடியாமல் சிக்கிக் கொள்கின்றன. இவ்வாறான இடங்களில் கைகழுவ செல்வதற்கோ, தண்ணீர் தேவைக்கோ செல்லும் மனிதர்கள் முதலையினால் காவுகொள்ளப்பட்டு பலியாகிறார்கள், காயப்பட்டுள்ளார்கள்.

இதற்கு காரணம் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமையே ஆகும்.
முதலைக்கடிக்குள்ளாகும் சம்பவங்களும், முதலைகளின் பெருக்கமும் 2009ஆண்டுக்கு பின்னரே அதிகரித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னர் மக்கள் முதலைக்கடிக்குள்ளாகி உயிரிழந்த சம்பவங்கள் குறைவாகத்தான் இருந்தது. காரணம் என்னவெனின் முதலைகள் நடமாட்டத்தை கண்டால் மீனவர்கள் அதனை உன்னிப்பாக அவதானித்து பில்லிவைத்து பிடிப்பார்கள்.

பிடித்த முதலைகளை கொன்று அதன் தோலை வாத்தியக்கருவிகள் செய்து விற்பார்கள். ஆனால் இன்று முதலைகள் சட்ட ரீதியாக பாதுகாக்கப்படுகின்றன. இதனால் முதலைகளை கொலை செய்வது குற்றமாகும். முதலைகளினால் பிடிக்கப்பட்டு மனிதன் உயிரிழந்தாலும் முதலைகளுக்கு தண்டனை கிடையாது! முதலைகளை பிடிப்பது நிறுத்துப்பட்டுள்ளதால் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

இன்றைக்கு பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் பல நீச்சல் வீரர்கள் காணப்பட்டார்கள். ஆனால் தற்போது நீச்சல்வீரர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது. அன்று நீச்சல் பயிற்சியை குளங்கள், வாவிகள், நீர் நிலைகளில் இலவசமாக மேற்கொண்டார்கள். காரணம் அன்று நீர்நிலைகள், வாவிகள், குளங்களில் முதலைகள் நடமாட்டம் இருக்கவில்லை. ஆனால் தற்போது முதலைகளின் பெருக்கத்தினால் பெரும்பாலானவர்கள் அதிக பணத்தை கொடுத்து நீச்சல் பயிற்சியை பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது.

இதனால் இன்று நீச்சல் விளையாட்டு அருகிச் செல்கிறது.
இதனை கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் என்பன, பொதுமக்கள், மீனவர்கள், சுற்றுலாப் பயணிகளின் நன்மைகருதி திட்டங்கள் வகுத்து செயற்படவேண்டும்.
வனஜீவராசிகள் திணைக்களம் முதலை தாக்கி இறந்தவருக்கு ஐந்து இலட்சமும் முதலையால் கடிப்பட்டவருக்கு 75 ஆயிரம் ரூபாவும் நஷ்டஈடாக வழங்குகிறது. இது போதுமானதாக இல்லை என்பது மீனவர்களின் அபிப்பிராயம். குடும்பத்தின் வாழ்வாதாரம் பறிபோன பின்னர் ஐந்து இலட்சமும் 75 ஆயிரமும் எப்படிப் போதுமானதாக இருக்கும் என்று கேட்கின்றார்கள் இவர்கள்.முதலைகளினால் கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள் ..!!! Rating: 4.5 Diposkan Oleh: Viveka viveka
 

Top