மட்டக்களப்பில் மீண்டுமொரு தண்ணீருக்கான போராட்டத்தில் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் !!



மட்டக்களப்பு எல்லை கிராமமான கௌலியாமடு பன்சல்கல விகாரை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு வனபரிபாலன திணைக்களம் அறிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குளக்கட்டில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

விகாரையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகள் 75 வீதம் முடிவடைந்த நிலையில் புனரமைப்பு ஒப்பந்தகாரரிடம் பொலிஸார் இலஞ்சமாக இலட்சக்கணக்கில் பணம் கேட்டனர்.

இதனால் மாதக்கணக்கில் புனரமைப்பு பணிகளை இடைநிறுத்தியிருந்தேன்.

எனினும், மீண்டும் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வனவரிபாலன திணைக்களத்தினர் அதனை நிறுத்துமாறு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

எனினும், இதற்கு இன்றுவரை நியாயமான பதில் கிடைக்கவில்லை.

எனவே நியாயம் கிடைக்கும் வரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் குளக்கட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.