களுதாவளையில் தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு



(ரவிப்ரியா)
களுதாவளையில் மேற்குப் பக்கமாக திருஞான சம்பந்தர் குருகுலத்திற்கு எதிர்ப்பக்கமாக தனியார் நிறுவனம் ஒன்றின் கைத் தொலைபேசி தொலைத் தொடர்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்கான முயற்சிக்கு இங்குள்ள மக்களும், பொது அமைப்புக்களம் கடும் எதிர்பைத்தெரிவித்து வருகின்றன. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையும் இதற்கான அனுமதி வழங்கவில்லை.

அத்துடன் இந்த முயற்சியை வன்மையாக கண்டித்து திருஞான சம்பந்தர் குருகுலமும் குறித்தகோபரம் 100மீற்றர் சுற்று வட்டாரத்துக்கள் வருவதால் குருகுலத்தில் தங்கியிருக்கும் சுமார் 40மாணவர்கள் அதன் கதிர் வீச்சுத் தாக்கத்திற்கு நேரடியாக பாதிப்பிற்குள்ளாகும் நிலை இருப்பதால் முயற்சியைக் கைவிடுமாறும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளது.

தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கான சட்ட திட்டங்களுக்கும் இது உட்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. அதில் உயர்மட்ட செல்வாக்குகள் பயன்படுத்தப்படுவதாகவம் மக்கள் சந்தேகிக்கின்றனர்.. மக்களை நேரடியாகப் பாதிக்கும் எதிர்காலத்தில் சமூகத்தில் பாரிய தாக்கங்களை செலுத்தக்கூடிய இந்த முயற்சியை உடன்கைவிடுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் மட்டக்களப்ப மாவட்டத்தில் பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயமும், களுதாவளை மகா வித்தியாலயமும் இந்தச் சுற்றாடலிலேயே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களையும் சூழலையம் பாதிக்கின்ற மதுபானசாலை, குடிநீர் தொழிற்சாலை வரிசையில் இந்த தொலைத் தொடர்பு கோபுரமும் அமைய இருப்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்களின் இயல்பு நிலைக்கு இடைஞ்சலாகவே அமையப் போகின்றது என்ற அச்சம் மக்களிடம் பரவலாக மேலோங்கி வருகின்றது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நிறவனங்களும் அதிகாரிகளும்; பொருத்தமான மக்களைப் பாதிக்காத முடிவுகளை எடுக்க முன்வரவேண்டும்.