இந்திய உயர்ஸ்தானிகரால் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினருக்கு பல உறுதிமொழிகள்


இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தரஜித் சிங் சது உடனான சந்திப்பொன்றை மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் 14.09.2018 அன்று நடாத்தியிருந்தனர். ஹோட்டல் ஈஸ்ட் லகூனில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. முக்கியமாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஆலயம் ஒன்றை
மட்டக்களப்பில் நிறுவுதல், மட்டக்களப்பு வர்த்தகர்கள் வியாபார நோக்கில் இந்தியப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் பல்தடவை விசா (Multiple Visa) சலுகையை வழங்குதல், இந்திய தொழிச்சாலைகளின் தொழில் நுட்பங்களை மட்டக்களப்புக்கு கொண்டுவந்து இங்குள்ள முதலிட்டாளர்களுக்கு அறிவூட்டல், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திற்குத் தேவையான தமிழ் நூல்களை இந்தியாவில் இருந்து பெற்றுத் தருதல் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தேசபந்து மு.செல்வராஜா, மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர், தேசகீர்த்தி வி.ரஞ்சிதமூர்த்தி  மற்றும் வர்த்தக சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைகளில் தமிழ்ச் சங்கத்திற்கு தேவையான நூல்களின் பட்டியலை சமர்ப்பிக்கும்பட்சத்தில் அதனை உடன்பெற்றுத்தருவதாகவும், ஏனைய விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலமான முன்மொழிவினை சமர்ப்பிக்குமாறும் இவ்விடயங்களை தான் கவனத்தில் எடுப்பதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார். இதன்போது நினைவுச் சின்னம் ஒன்றும் உயர்ஸ்தானிகருக்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது.