ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தி தின விழாவை முன்னிட்டு ஆன்மீக மற்றும் கலாசார நிகழ்வுகள்


(சிவம்)

ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தி தின விழாவை முன்னிட்டு ஆன்மீக மற்றும் கலாசார நிகழ்வுகள் மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று (17) மாலை நடைபெற்றது.

ஸ்ரீ விஸ்வப்பிரம்மாவால் பஞ்ச தொழில்களுக்கு அதிபதிகளாகிய பஞ்ச ரிஷpகளான மனு, மயா, துவட்டா, தேவசில்பி மற்றும் விஸ்வக்ஞா ஆகிய பஞ்ச கம்மாளர்களுக்கு விஸ்வருப திரிசனம் கொடுத்து ஆசி வழங்கியதை நினைவு கூரும் தினமே ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தியாகும்.

மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினமான சிவம் பாக்கியநாதன் தiiமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஸ்வகர்ம கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ பரப்பிரம்மமம் ஸ்ரீ விஸ்வகர்மா உடனுறை ஸ்ரீ காயத்திரி தேவிக்கு விசேட அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை இடம்பெற்றன.

தொடர்ந்து விஸ்வகர்மா கலாசார மண்டபத்தில் ஸ்ரீ விஸ்வப்பிம்ம வழிபாடும் அதன் சிறப்புக்களும் பற்றிய ஆன்மீக உரையை கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பா.சிவலோகேஸ்வரக் குருக்கள் நிகழ்த்தினார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தினால் வருடம்தோறும் உயர் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கோடு பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பு ஒக்டோபர் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.