பால் வாங்கச் சென்ற இளைஞனுக்கு நடந்த பரிதாபம் ....!!

(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு இலுப்பையடி கண்டத்தில் காட்டுயானை தாக்கியும்,மிதித்தும் இளைஞன் உயிரிழப்பு.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்பையடி கண்டத்தில் சனிக்கிழமை(15) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற காட்டுயானையின் தாக்குதலால் இளைஞர் உயிரிழந்துள்ளான். பெரியபுல்லுமலை கோப்பாளி கிராமத்தை சேர்ந்த ஞானம் சங்கீதன்(22 வயது) எனும் இளைஞனே இவ்வாறு காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இவ்வாறு தான் வளர்த்த ஆடு இருபது நாட்களுக்கு முன்னர் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. ஆட்டுக்குட்டிகளுக்கு தாய் ஆடு பால்கொடுப்பதற்கு மறுத்துள்ளது. இதனால் பண்ணையடிக்கு பால் வாங்க குறித்த இளைஞன் சென்றபோது காட்டுக்குள் மறைந்திருந்த யானையானது கையும்மெய்யுமாக இளைஞனை பிடித்து ;நிலத்திலே தூக்கி வீசியும், தலையில் காலை வைத்தும் மிதித்துள்ளது. இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள இளைஞனின் சடலத்தை பொலிசார், பொதுமக்கள் மீட்டெடுத்து செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.