பாண்டிருப்பு தீப்பள்ளயம் வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு




    
  பாண்டிருப்பு தீப்பள்ளயம்  21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீ மிதிப்புவைபவத்துடன் நிறைவு பெறவுள்ளது.  
          
கிழக்கில் தொன்மை மிகு பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்  கடந்த செப்டெம்பர்(04) ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றம் ஆகியவற்றுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்றவருகின்றது.   எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் தீ மிதிப்பு வைபவத்துடனும் மறுநாள் பாற்பள்ளையச் சடங்குடன் உற்சவம் நிறைவு நடைபெறவுள்ளது. 

ஆலய உற்சவத்தின் 18 நாட்களில்; முக்கிய வழிபாடாக பதினாறாம் நாள் (19ஆம் திகதி ) பாண்டவர்கள், திரௌபதை சகிதம் வனவாசம் செல்லல் நிகழ்வும், பதினெழாம் நாள்(20ஆம் திகதி )  அருச்சுனன் தவநிலை செல்லல் காட்சியும், பதினெட்டாம் நாள்(21ஆம் திகதி )  மாலை ஆலய உற்சவத்தின் சிகரமாக விளங்கும் தீமிதிப்பு வைபவம் நடைபெறவுள்ளது. மறுநாள்(22ஆம் திகதி )  தீக்குழிக்கு பால்வார்க்கும் பாற்பள்ளயச் சடங்குடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.  

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கிராமிய வழிபாட்டையே தமது வழிபாடாக கருதி வழிபட்டு வருகின்றனர். இம்மக்கள் சக்தி வழிபாட்டில் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருப்பதை இங்குள்ள கிராமங்கள் தோறும் அமைந்துள்ள சக்தி ஆலயங்கள் பறைசாற்றி நிற்கின்றன. 
அந்த வகையில் கண்ணகி அம்மன், காளி அம்மன், மாரி அம்மன், மீனாட்சிஅம்மன், பேச்சிஅ ம்மன், நாககன்னி அம்மன், திரௌபதை அம்மன் என பல ஆலயங்களை நிறுவி அதன் மூலம் தமது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். 

சக்தி ஆலயங்களில் உற்சவங்கள் ஆரம்பிக்கப்பட்டால் மிகுந்த பயபக்தியுடன் மக்கள் அவ் வழிபாட்டில் ஒன்றித்துவிடுகின்றனர். தமது  உள்ளத்தையும், இல்லத்தையும், கிராமத்தையும் தூய்மையாக வைத்திருப்பதுடன் சில ஊர்க்கட்டுப்பாடுகளை விதித்து புனிதமாக வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். அம்மன் அருளாள் தங்கள் குறைகளையும் தீர்த்துக் கொள்கின்றனர். இது காலங்காலமாக மக்கள் மத்தியில் இடம் பெற்றுவரும் தெய்வ நம்பிக்கையாகும். 

கிழக்கில் பல்வேறு சக்தி ஆலயங்கள் அமையப்பெற்றாலும் அதில் மிகத் தொன்மையான ஆலங்கள் சிலதே அமைந்துள்ளன. இலங்கையில் மட்டக்களப்பிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. வர்த்தக நகரான கல்முனை. இக் கல்முனை நகரில் இருந்து வடக்கே 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது பழமைவாய்ந்த பாண்டிருப்பு கிராமம். இங்குதான் பழமையின் பெருமை கூறும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் உற்சவம் புரட்டாதி மாதத்தில் ஆரம்பமாகி மரபு வழி சார்ந்த வழிபாட்டு முறைகளின் படி 18 தினங்கள் பூசைகள் இடம் பெற்றுவருகின்றன.
 
கிழக்கில் தொன்மை வாய்ந்த சக்தி ஆலயங்களில் ஒன்றாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதிஅம்மன் ஆலயம் விளங்குகின்றது. 'தீப்பள்ளயம்'என்றால்தான் அனைவருக்கும் தெரியும். இங்குநடைபெறும் பூசைவழிபாடுகள் ஏனைய ஆலயங்களில் 
இருந்துவேறுபட்டுநிற்கின்றது. திரௌபதிஅம்மனை வருந்தி அழைத்து கும்பிட்டு மன்றாடி வந்தனை செய்து வழிபடுகின்ற மரபும் பாண்டவர் வேடம் பூண்டு நிற்கின்றவர்களுக்குமே இங்குவிசேடபூசைவழிபாடுகள் நடைபெறுகின்றன. 

மனிதனைதெய்வமாக பூஜிக்கும் மகாசக்திஆலயமாகவும் பாண்டிருப்பு  திரௌபதிஅம்மன் ஆலயம் விளங்குகின்றது. 
மகாபாரதக்கதையினை மையமாக வைத்து 18தினங்கள் பாண்டிருப்பு திரௌபதியம்மன் ஆலய உற்சவங்கள் நடைபெறுகின்றன. இலங்கையில் முதன்முதலில் திரௌபதி அம்மனுக்கென ஆலயம் அமையப்பெற்றது பாண்டிருப்பிலேயாகும். வட இந்தியாவில் இருந்து தாதன்மாமுனியும் அவனதுஆட்களும் இந்தியாவின் கொங்குநகரில் இருந்துகப்பலேறி புறப்பட்டவர்கள். கிழக்குகரையை வந்தடைந்தனர்.  

மட்டக்களப்புபகுதியிலிருந்து புறப்பட்ட தாதன்மா முனிவன் அந்நாளில் நாகர்முனை என அழைக்கப்பட்ட திருக்கோவிலைச் சென்றடைந்து அங்கு தங்கியிருந்து மகாபாரதக்கதையினை மக்கள் மத்தியில் பரப்பிவரலானான். இந்தியாவிலிருந்து தாதன் என்பவன் இங்கு வந்திருப்பதனை அறிந்துகொண்டமட்டக்களப்புபகுதிக்குசிற்றரசனாக இருந்த மாருதசேனனுடையபுத்திரன் எதிர் மன்னசிங்கன். (கி.பி.1539-கி.பி. 1583வரை) காலப்பகுதியில் தாதனைக்கண்டு அவனது நோக்கம் வருகைபற்றி விசாரித்துஅறிந்துகொண்டான். தாதனும் தனதுவருகையின் நோக்கம் பற்றிமன்னனிடம் எடுத்து இயம்பினான்.  அத்தோடு தமதுவழிபாட்டிற்குகந்த இடம் ஒன்றைத்தேடிவழங்குமாறும் கேட்டுக்கொண்டான். 

எதிர்மன்னசிங்கனும் தாதனின் விருப்பப்படிஅவனையும் அழைத்துக்கொண்டுமீண்டும் கடல் வழிப்பயணம் செய்தபோதுஅருகேகடலும் ஆலவிருட்சங்களும்  கொக்கட்டிமரங்களும் நாவல்மரங்களும் மேற்கேஅடர்ந்தவனப்பகுதியும் காணப்பட்டபாண்டிருப்பைக் கண்டு இறங்கிஅங்கேயேதங்கிதான் கையோடுகொண்டுவந்திருந்த விஸ்ணு, திரௌபத,p பாண்டவர்கள் சிலைகளை வைத்து கொக்கட்டிமரத்தடியில் கொத்துப்பந்தலிட்டு வழிபாடு நடத்திவந்தான். மன்னனும் தாதனின் வழிபாட்டிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினான். இதேவேளை திரௌபதிஅம்மனின் மகிமையை அறிந்துகொண்ட கண்டிமாநகரைஆட்சிபுரிந்தமன்னன் விமலதர்மசூரியன் (கி.பி.1594-கிபி 1604) காலப்பகுதியில் இங்கு வந்து அம்மனை தரிசித்துவிட்டு பொன், வெள்ளி பொருள் கொடுத்து சென்றதாக கல்வெட்டுக்களில் இருந்து அறியமுடிகின்றது 

ஆரம்பத்தில் தாதன் ஆலயம் என அழைக்கப்பட்ட இவ்வாலயம் பின்பு பாண்டிருப்பு திரௌபதிஅம்மன் ஆலயம் என பெயர் பெற்றது. இவ் ஆலயத்தின் பிரசாதமாகமருத்துவ மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் வாசனைமிக்க 'பாண்டாரப்பொட்டு' அற்புதம் மிக்கதும் பிணிதீர்க்கும் அரும் மருந்தாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் மிக நீண்ட தீக்குழியைக் கொண்ட ஆலயமாக பாண்டிருப்புதிரௌபதிஅம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்குபெண்கள் தீமிதிப்பில் ஈடுபடமுடியாது. ஆலய உற்சவகாலங்களில் பாண்டவர்கள் திரௌபதி கண்ணன் தேவாதிகள் என ஆலயத்தில்  கட்டுக்கு நிற்பவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது  வீடுகளுக்குச் செல்லமுடியாது அந்தளவிற்கு பயபக்தியுடன் விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. 

ஆலய உற்சவத்தின் 18 நாட்களில்; முக்கிய வழிபாடாக முதலாம் நாள் பூர்வாங்க கிரியைகள்,  திருக்கதவு திறத்தல், பாண்டவர்கள் கடல் குளித்து ஆயுதம் கழுவி வந்து ஊர்க்காவல் பண்ணல் கொயேற்றம் ஆகிய நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. மூன்றாம் நாள் மகாபாரத பாராயண ஏடு திறத்தல் இடம் பெறும். ஏழாம் நாள் சுவாமி எழுந்தருளல் பண்ணல் ( ஸ்ரீ கிருஸ்ணர் அத்தினாபுரம் எழுந்தருளல்) நிகழ்வு மிகவும் எடுப்பாக பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இடம் பெறுகின்றது. எட்டாம் நாள் நாட்கால் வெட்டல் நிகழ்வு இடம் பெறும். பன்னிரெண்டாம் நாள் கலியாணக்கால் வெட்டல் நிகழ்வும் , பதினாறாம் நாள் பாண்டவர்கள், திரௌபதை சகிதம் வனவாசம் செல்லல் நிகழ்வும், பதினெழாம் நாள் அருச்சுனன் தவநிலை செல்லல் காட்சியும், பதினெட்டாம் நாள் மாலை ஆலய உற்சவத்தின் சிகரமாக விளங்கும் தீமிதிப்பு வைபவம் இடம் பெறுகின்றது. மறுநாள் தீக்குழிக்கு பால்வார்க்கும் பாற்பள்ளயச் சடங்குடன் உற்சவம் நிறைவு பெறுகின்றது.

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் உற்சவங்கள் யாவும் மகாபாரத கதையினை அடியொற்றியதாகவே இடம் பெறுகின்றது. மகாபாரதத்தில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும்  இடையில் நடைபெற்ற போரில் பாண்டவர்கள் சந்தித்த சத்திய சோதனைப் பயணங்களை எடுத்துக்காட்டும் வகையிலே திரௌபதை அம்மன் வழிபாடு அமைந்துள்ளது. 
இதில் முக்கிய திருவிழாவாக பாண்டவர்கள் வனவாசம் செல்லல், அருச்சுனன் தவநிலை செல்லல், பாண்டவர்கள் திரௌபதை சகிதம் தீப்பாய்தல் ஆகிய நிகழ்வுகள் உற்சவ காலத்தின் இறுதி மூன்று தினங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இக் காலப்பகுதியில் நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் பக்தர்கள் பாண்டிருப்புக்க படையெடுப்பார்கள். பாண்டிருப்பு மட்டுமல்ல கல்முனைப் பிரதேசமே விழாக்கோலம் பூண்டிருக்கும். 

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய உற்சவம் இங்குள்ள குடிகள் மற்றும் சகியங்களின் பங்களிப்புடன் 18 தினங்கள் பூசை முறைப்படி நடத்தப்படுகின்றன. இதன் படி 11 குடிகள் 04 சாகியங்களும் பூசை செய்கின்றனர். அதற்கென முகாமைக்காரர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆலயத்தின் முதலாம் நாள் மற்றும் இறுதி நாள் தீப்பாய்தல் பூசையினை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இக் கிராமத்தில் பல்வேறு குடிகளும், சாகியங்களும் காணப்பட்டாலும் அவை ஆலய மரபுகளுக்காக பிரிக்கப்பட்டுள்ளதே தவிர மற்றும் படி ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போன்று கூடிக் குலாவி வருகின்றனர். ஏனைய கிராமங்களில் நடைபெறும் சாதி சண்டைகள் போல் இங்கு இடம் பெறுவதில்லை. இதனாலே பாண்டிருப்புக் கிராமத்தின் சிறப்பு மேலோங்கிக் காணப்படுகின்றது. 

இவ் ஆலயத்திற்கென மரபு வழிவந்த ஆலய நிர்வாகத்தினர், பாண்டவர்கள், பூசகர்கள் என தமது குலமரபுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிணங்க ஊரில் பூசகர் தத்தி, தருமர் தத்தி, வீமர் தத்தி, அருச்சுனர் தத்தி, நகுலன் தத்தி, சகாதேவன் தத்தி, என மகாபாரத கதையை அடியொற்றியதாக சில வகுக்கப்பட்டுள்ளன. 
பாண்டிருப்பில் இன்று கூட திரௌபதை அம்மன் ஆலயத்தின் வழிபாட்டு முறைகளை எடுத்தியம்பக் கூடிய வகையில் மக்கள் மத்தியில் சில காரணப்பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. வீமர் வீதி, அருச்சுனர் வீதி, வாள் மாற்றும் சந்தி, கல்யாணக்கால் வெட்டும் இடம், மஞ்சள் குழிக்கும் இடம் போன்றவைகள் மகாபாரத மரபினை அடியொற்றியதாகவே காணப்படுகின்றன.  
உலகில் மிக நீண்ட தீக்குளி அமைந்த ஆலயம் சிறப்பு 

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் விண்முட்ட மூட்டப்படும் தீயின் வேள்வியினால் இக் கிராமத்தின் கீர்த்தி அகில உலகளவில் பரவி நிற்கின்றது. எந்தவொரு இந்து ஆலயங்களிலும் இல்லாத பெருமை இங்குள்ள தீக்குழிக்குள்ளது. 21 அடி நீளமும் 3 அடி ஆழமும் 4 அடி அகலமும் கொண்ட தீக்குழியாக அன்னை திரௌபதை அம்மன் ஆலய தீக்குழி அமைந்துள்ளது. இத் தீயின் வேள்வியினாலே 'தீப்பள்ளயம்' என அழைக்படலாயிற்று.
 
பல பிறவிகள் எடுத்த ஆன்மாவானது ' எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்' என கூறுவதைப்போல இறுதியில் பரம் பொருளை போய்ச்சேருங்கின்ற மோட்ச நிலையைக் குறிக்கும் வகையில் பூசாரிமார் பாண்டவர்கள் திரௌபதை சகிதம் தேவாதிகள் அனைவரும் மேனியெங்கும் மஞ்சள் பூசிக்கொண்டு ஆன்ம ஈடேற்றம் கருதி தீக்குளியில் இறங்குகின்ற காட்சியினை காண்பதற்க்கு காணகண்கோடி வேண்டும். தீயில் நடப்பவர்கள் அரஹரா ஓசை விண்ணைப்பிளக்க உடுக்கைஇ சலங்கை பறை மங்கள வாத்தியங்கள் முழங்க  அனைவரும் தெய்வத்திடம் போவதாகவே இத் தீ மிதிப்பு வைபவம் பாண்டிருப்பில் நடைபெறுகின்றது. 
இத் தீ மிதிப்பை பார்த்து விட வேண்டும் என்பதற்க்காகவே நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் மக்கள் பாண்டிருப்புக்கு வருகைதந்து தவம் கிடக்கின்றனர். இங்கு 21 அடி குழியில் தீ மிதிப்பதற்க்கு பரிபக்குவம் இருக்கவேண்டும். ஒரு கமுகம் பாளையில் நெருப்பில்லாமல் நெருப்பு வரும் மகா சக்தி  ஆலமாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.


இவை எல்லாவற்றுக்கும் மேலாக இண ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் திகழ்கின்றது. இவ்வாலய உற்சவ காலத்தில் முஸ்லிம், சிங்கள மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். தீராத வினைகள் எல்லாம் தீர்த்து வைக்கும் மகா சக்தியாக திரௌபதை அம்மன் ஆலயம் திகழ்கின்றது. அம்மனை நம்பி நேர்த்தி வைத்து வழிபட்டு துயர்கள் தீர்ந்தவர்கள் இங்கு வந்து நேர்திக்கடன்களை நிறைவேற்றிச் செல்கின்றனர். இன்று ஆலய உற்சவ காலத்தில் இங்கு வரும் சகோதர முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் சாட்சியாகும். 

அற்புதமும், மகிமையும், பழமையும், புதுமையும்   நிறைந்த மகா சக்தி ஆலயமாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் திகழ்கின்றது. இவ் ஆலயம் கடந்த 2016 இல் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. பண்பாட்டுக்கும், பக்தி வழிபாட்டிற்க்கும் பேர்போன பாண்டிருப்புக் கிராமத்தை எட்டுத் திக்கும் கீர்த்தி பெறவைத்துள்ள திரௌபதை அம்மன் அருளை நிதம் வேண்டி இம் மக்கள் போற்றி வழிபடுகின்றனர்.  


.