பிரபாகரனின் மனைவி மகள் மரணம் தொடர்பில் புதுத் தகவலை வெளியிட்டார் பொன்சேகா



பிரபாகரனின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் முன்னிலை பாதுகாப்பு அரங்கு (பங்கர்) போரில் அகப்பட்டே கொலை செய்யப்பட்டதாக புலனாய்வு தகவல்கள் மூலம் அறிந்துகொண்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதும் யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து கூட்டத் தொடர்கள் இடம்பெற்று வருகின்றன.

44000 பேர் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டார்கள் என்று குறிபபிடுவது பொய்யானதாகும். 4ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரண்டு வருட காலத்திற்கும் 06 மாதங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 23 ஆயிரத்திற்குட்பட்ட புலிகள் கொல்லப்பட்டனர். இதனை விடுதலைப் புலிகளின் வானொலி தகவல்கள் மூலம் பெற்றுக்கொண்டோம்.

யுத்த விவகாரம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. இருப்பினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் யுத்த குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பில் எவரும் என்னிடம் கருத்துக்களை கோரவில்லை என்றார்