மாணவர்கள்,பொதுமக்களின் நலன் கருதி அட்டப்பள்ளத்தில் புதிய பஸ் சேவை ஆரம்பம்


பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் கிராமத்தில் இருந்து கல்முனைக்கான புதிய பஸ் சேவை ஒன்றை சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் கடந்த வாரம் ஆரம்பித்து வைத்தார்.

அட்டப்பள்ளம் 10 மற்றும் 23 ஆம் பிரிவுகளில் இருந்து நிந்தவூர் ,காரைதீவின் ஊடாக கல்முனையை நோக்கி இந்த புதிய சேவை இடம்பெற்று வருகிறது.

இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் இரண்டு கிலோ மீற்றர் வரை நடந்து சென்றே பஸ்ஸிற்காக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டனர். அவர்கள் பல தடவைகள் பாடசாலையை தவற விடவும் செய்தனர். இதனால் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அதேபோல் பொது மக்களும் அவர்களின் வேலைகளை உரிய நேரத்தில் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டனர்.

இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கும் நோக்கில் மேற்படி பஸ் சேவையை பிரதி அமைச்சர் ஆரம்பித்து வைத்தார். இப்போது மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலையைச் சென்றடையவும் பாடசாலை விட்டு வீடுகளுக்குச் செல்லவும் முடிகின்றமை இட்டு மாணவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.