மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக தேயிலை, இறப்பர் அடங்கலான பெருந்தோட்டத்துறை விளங்கி வருகின்றது. அதிலும் பல தசாப்தங்களாக இத்துறை இவ்விடயத்தில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.

இதன் நிமித்தம் இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தம் உதிரத்தையே வியர்வையாகச் சிந்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அவர்கள் அளித்துவரும் பங்களிப்பை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது.

இருந்தும் அவர்கள் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுப்பதற்காக அளித்துவரும் பங்களிப்பை மதித்து கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கான வேதனக் கொடுப்பனவு அமைந்துள்ளதா என்றால் அது பெரும் கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.

ஓரு நாட்டின் பொருளாதாரத்திற்காக அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறையொன்றில் பணியாற்றுபவர்களுக்கு நியாயமாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் வேதனம் வழங்கப்பட வேண்டும். அது தான் நியாயமானது. ஆனால், இந்நாட்டு பெருந் தோட்டத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேதனம் அவ்வாறானதல்ல. இதனை எல்லா மட்டத்தினரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெறுகின்ற வேதனத்தையும் இப்போதைய வாழ்க்கைச் செலவையும் ஒப்பு நோக்கினால் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான ஏற்ற தாழ்வை அவதானிக்கலாம். இருந்தும் அவர்கள் நாட்டின் பொருளாதார நன்மைகள் கருதி அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்றனர்.

இந்தப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பானது பொருந்தோட்டக் கம்பனிகள் அங்கம் வகிக்கின்ற முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஊடாக இணக்கப்பாடுகள் எய்தப்பட்டு கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே அதிகரிக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒரு தட​ைவ பேச்சுவார்த்தைகளின் ஊடாகப் புதுப்பிக்கப்படுகின்றன.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் இம்மாதம் (ஒக்டோபர்) 15ஆம் திகதியுடன் முடிவடைந்தது. அதனால், இவ்வொப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் இரண்டு மூன்று சுற்றுப் பேச்சுக்களை நடாத்தின.

தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு வழங்குமாறு பெருந்தோட்டத் தொழிற் சங்கங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனம் தற்போது வழங்கும் நாளாந்த வேதனத்தில் ரூ. 25.00 அதிகரிப்பை மேற்கொள்ளும் யோசனையை முன்வைத்தது. இந்த யோசனையைத் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளதோடு ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு கோரிக்கையை உறுதியாக முன்னெடுத்து வருகின்றன.

'இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பே ஓரளவாவது நியாயமானதாக இருக்கும். அந்தடிப்படையில் தான் இக்கோரிக்கையை முன்வைத்திருப்பதாக' தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.

'ஆனால், முதலாளிமார் சம்மேளனம் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்புக்காக முன்வைத்திருக்கும் யோசனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல' எனவும் அத்தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படாத நிலையில் இது தொடர்பில் தொழில் அமைச்சருடன் பேச்சவார்த் தைகளை நடாத்தத் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ளன.

இதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்து மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஆரம்பித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதோடல்லாமல் பிரதேச மட்ட வர்த்தகர்களும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு நல்குகிறனர்.

இந்தடிப்படையில் வட்டகொட நகரில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்திய போது அந்நகர வர்த்தகர்கள் தம் வியாபார நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு நல்கியுள்ளனர்.

இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு நல்கும் சாத்தியங்ளே அதிகமுள்ளன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்காதென தொழிலாளர்கள் கருதும் நிலைமை ஏற்படுமாயின் இத்தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கான சாத்தியங்களும் தென்படவே செய்கின்றன. அவ்வாறான நடவடிக்கை இந்நாட்டு பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தக்கூடியதாகவே அமையும். இது பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதாக அமையாது.

அதனால் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்புக் கோரிக்கையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு அணுக முதலாளிமார் சம்மேளனம் முன்வர வேண்டும் என்பதே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆகவே தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் அவர்களது தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு இந்த மட்டத்திலேயே நியாமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். அது தொழிலாளர்களுக்கு அளிக்கும் நன்மையாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அளிக்கும் உபகாரமாகவும் அமையும்.