காட்டு யானைகளால் இருப்பிடங்களுக்கும் பாடசாலை மதிலுக்கும் சேதம்


காட்டு யானைகளால் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கும் பாடசாலை சுற்றுமதிலுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வெலிக்கந்தை பொலிஸ் பிரிவின் காலிங்வில பகுதியில் நேற்று(திங்கட்கிழமை) இரவு 3 வீடுகள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் வெலிக்கந்தை நகரத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள காலிங்வில கிராமத்தைச் சுற்றி மாலையாகியதும் காட்டு யானைகள் முகாம் அமைத்து இருப்பதைப் போன்று உலாவருவதாக கிராமவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்காரணமாக மாலையானதும் அச்சத்துடனேயே பொழுதினைக் கழிப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.


இதேவேளை, மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளியிலுள்ள பாடசாலையொன்றின் சுற்றுமதிலை காட்டு யானைகள் சேதமாக்கியுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.


அத்துடன், குறித்த பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றினையும் சேதப்படுத்தியுள்ளன. எனினும் இதன்போது எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.