மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்

(சா.நடனசபேசன்)
பெண் வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.எனும் தலைப்பில் வெளியாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த கருத்தின் பிரகாரம் அந்த பெண் வலயக் கல்விப் பணிப்பாளர் நான் என்ற வகையில் இச்செய்தியை முழுமையாக மறுக்கின்றேன். என திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி  நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.


அண்மையில்  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்  தெரிவித்த கருத்துக்கு மறுப்புத்தெரிவித்து மேற்கண்டவாறு  தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்
சேவை அடிப்படையில் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்.M.T.M .நிஸாம் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது நான்  என்ற போதிலும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் என்னிடம் எந்த தரப்பும் விருப்பம் கேட்கவுமில்லை. கலந்துரையாடவுமில்லை. இப்படியான நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் எனக்கு விருப்பமில்லை என கூறியதாக கூறுவது அப்பட்டமான பொய். இதனை அவராகவே உருவாக்கியுள்ளார். அல்லது அவரிடம் கூறியவர் உருவாக்கியுள்ளார்.

எனக்கு நியமனம் மறுக்கப்பட்டால் அதனை நான் எனது மேலதிகாரிகளிடம் தான் கோரலாம். அந்தவகையில் செயலாளர் மற்றும் ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அதை விடுத்து சம்மதக் கடிதம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது என்பது முற்றிலும் நான் இதுவரை அறிந்திராத வேடிக்கையான புதிய நிருவாக முறை என நான் நினைக்கின்றேன்.

அம்பாரை மாவட்டத்தில் தான் திருக்கோவில் வலயம் அமைந்துள்ளது. நான் அங்குதான் பாணமை வரை சென்று கடமையாற்றுகின்றேன். 2010ம் , 2011ம் ஆண்டுகளிலும் அங்கேதான் கடமையாற்றினேன். இப்படியிருக்க மாவட்டத்திற்கு வெளியே கடமையாற்றவில்லை என அப்பட்டமான பொய்யை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறுவது வியப்பளிக்கின்றது
.
நான் கடமையாற்றிய வலயங்களில் பல சவால்களுக்கும் முகம்கொடுத்து முழுமையான மாற்றத்தினையும், கல்வி அபிவிருத்தியையும் மைல்கல்லாக ஏற்படுத்தியுள்ளதுடன் செயற்பட முடியாத வாயால் வேலை செய்யும் இயலாமை உள்ள உத்தியோகத்தராக நான் கடமையாற்றவில்லை என்பதை அக்கல்வி அபிவிருத்திகளும் பெறுபேறுகளும்  சான்றாயிருக்கின்றன. இதை சமூகம் ஏற்றுக்கொள்ளும் என நான் நினைக்கின்றேன்.

மற்றவர்களை மட்டம் தட்டி தம்பட்டம் அடிப்பவர்கள், தங்களை பெரிதாக காட்ட முனைபவர்கள் செயல்வீரர்கள் என்றும் சமூகத்தில் அதிகம் அமைதியாக இருப்பவர்கள் திறமைசாலிகள் இல்லை என்ற அர்த்தமும் இல்லை. கடமை வேறு, குடும்பம் , ஊர், மாவட்டம் வேறு. இவற்றை நேசிக்காத ஒருவரால் நாட்டை நேசிக்கமுடியாது. இவற்றில் குறை உள்ளவர்கள் தான் மற்றவர்களிடம் குறைகாண்பவர்கள்.

எனது தொழிலுக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டதன் முலமே மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் தகுதியை நான் பெற்றுள்ளேன். எந்த அரசியலினாலும் குறுக்கு வழியில் நான் பதவி தேட முனையவில்லை. எனது திறமையும் தகுதியையும் நிரூபித்தே பெற்றேன் என்பதுதான் உண்மை. இவற்றை விடுத்து குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தான் கூறியதை மறைக்க கட்சியையும் இணைத்து பொய்யான கருத்துக்களை வெளியிட்டிருப்பதை நான் முழுமையாக மறுக்கின்றேன். என்றார்