கல்முனையில் வாகனத் தரிப்பிடம் அமைக்க நடவடிக்கை




கல்முனையில் வாகனத் தரிப்பிடம் அமைக்க நடவடிக்கை; வர்த்தகர் சங்கத்திடம் முதல்வர் உறுதி  

கல்முனை நகரின் நீண்ட கால தேவையாக இருந்து வருகின்ற வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுதியளித்துள்ளார்.

கல்முனை வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை (10) இரவு மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றபோது, அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே முதல்வர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்முனை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக் தலைமையிலான பிரதிநிதிகள், முதல்வருடனான இச்சந்திப்பின்போது கல்முனையில் நிலவும் குறைபாடுகள், அவசியத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் முதல்வரிடம் கையளித்துள்ளனர்.

இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சியினால் கனடாவின் 34677 ரூபா செலவில் கல்முனையில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ செயற்றிட்டம் குறித்து வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுக்கு விளக்கிக்கூறிய முதல்வர், கல்முனை மாநகர சபை மற்றும் பொதுச் சந்தை என்பவற்றுக்கு புதிய கட்டிடத் தொகுதிகள் அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார். 

மாநகர சபையின் வேலைத் திட்டங்களை சிறப்பாக முன்னெடுப்பதற்கு வர்த்தகர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் முதல்வர் றகீப் இதன்போது வலியுறுத்தினார்