தேசிய குறிக்கோளை அண்மித்த வகுப்பறைச் செயற்பாடுகள்



வளர்ந்து வருகின்ற இன்றைய உலகில் புதிய கல்விக் கொள்கைகளும்,கல்வி மாற்றங்களும் காலத்துக்கு காலம் ஒவ்வொரு நாட்டின் கல்வி அமைப்பை பொறுத்து மாற்றமடைந்து வருகின்றன.கைத்தொழிலுடன் கூடிய சமூகமொன்றை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையிலான அனைத்து செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக கல்விக்கொள்கைசார் அமைப்பும், கல்விக்கொள்கைகளும் முக்கியம் பெறுகின்றது என்பதை உணர்ந்த கல்விக்கொள்கையாளர்களும், கல்விச் சீர்திருத்தவாதிகளும், தேசியகல்வி நிறுவகமும்(N I E) நாட்டின் தேசிய இலக்கினை அடையும் வகையில் வெவ்வேறு வகையான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் காலமாற்றத்திற்கு ஏற்ப புதிய தடங்களும், கொள்கைகளும் இலங்கையின் கல்விக் கொள்கையினுள் செல்வாக்கு செலுத்துவதனை காணமுடிவதுடன் இன்றைய வகுப்பறைகளில் இடம்பெறும் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நாட்டின் தேசிய குறிக்கோளினை அடையும் வகையில் இடம்பெறுகின்றது என்பதனை ஆராய வேண்டிய தேவைப்பாடு எழுகின்றது.



'மாணவனின் அளவு ரீதியான பண்பு ரீதியான விருத்தியே அவனின் மொத்த விருத்தியாக கருதப்படும். இது சிறந்த நடத்தை மாற்றத்தை அவதானிப்பதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு சிறந்த நடத்தை மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு ஆசிரியர் கற்பித்த விடயங்களுடாக தான் எதிர்பார்த்த நடத்தை மாற்றத்தை விசேட குறிக்கோளுடாக அடையப்படும். இதன்படி சிறந்த நடத்தை மாற்றம் ஏற்படுவதற்கு பாடக்குறிக்கோள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.'மாணவர்களிடம் கற்றல் செயற்பாடுகள் அறிவு, திறன், மனப்பாங்குகளை ஏற்படுத்தும் வகையிலே ஆசிரியரினால் குறிப்பிட்ட பாடச்  வகுப்பறைமட்டத்தில் விசேட குறிக்கோளினை(Specific objective) அடையும் வகுப்பறைமட்டப் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், அவற்றினை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.



ஆசிரியர்கள் வகுப்பறைச் செயற்பாட்டில் தமது தேவைகளை அடைவதற்கான முயற்சியில் மாணவரிடையே ஏற்படுத்த வேண்டிய நடத்தைக் கோலங்களை இனங்காணுதல் மூலமே கல்வியின் குறிக்கோளினை அடைய முடிவதுடன், படிப்படியாகவே பாடசாலையின் குறிக்கோள்(objective) அடையப்பட்டு, அதன் பின்னர் பிராந்திய மட்டத்தில் நோக்கம் அடையப்பட்டு தேசிய மட்டத்தில் இலக்குகள்(Aims) பதின்மூன்று வருட கலைத்திட்டத்தில் அடையப்பட்டு வருகின்றது. தேசிய ரீதியில் சில எதிர்பார்ப்பின் அடிப்படைக்கூறு வகுப்பறைமட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

சமூகத்தின் எதிர்பார்ப்பினையும், பெற்றோரின் நம்பிக்கையினையும், நாட்டின் தேசிய கொள்கையினையும் நிறைவேற்றும் வகையிலும் சமூகத்தின் மத்திய அலகாக பாடசாலையின் பங்களிப்பு அளப்பெரியது. பின்லாந்தைப் போல் கல்வியில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவதன் வாயிலாக நாட்டை அபிவிருத்தி அடையச் செய்யலாம் என்பதற்கிணங்க ஒரு நாட்டின் கல்வியமைச்சின் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்தவகையில் கலைத்திட்டம்,கற்பித்தல்; முறைகள், கற்பித்தல் துணைச் சாதனங்கள், பாட உள்ளடக்கம், பாடத்திட்டம் என்பன முதன்மை பெறுகின்றது. நாட்டின் தேசிய இலக்கினை அடையும் வகையிலான அனைத்து செயற்பாடுகளும் வகுப்பறை கற்றல கற்பித்தல் செயற்பாட்டை அடிப்படையாக கொண்டு அமைகின்றன.



நாட்டின் தேசிய இலக்கினை அடையும் வகையிலான கலைத்திட்ட தயாரிப்பினை அடுத்து கலைத்திட்டத்தினை அடியொற்றி பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். ஓவ்வொரு ஆசிரியர்களும் பாடத்திட்டத்திற்கு அமைவாக வேலைத்திட்டத்தை தயாரித்துக் கொள்வர். வேலைத்திட்டத்தின்படி பாடக்குறிப்பானது பகுப்பாய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. வகுப்பறை ஒன்றில் 40 நிமிட பாடவேளையை அடிப்படையாகக் கொண்டு விசேட குறிக்கோளினை அடையும் வகையில் இடம்பெறும் இச்செயற்பாட்டின் வாயிலாகவே பாடசாலையின் குறிக்கோள் அடையப்பட்டு நாட்டின் தேசிய இலக்கு அடையப்படும் வகையில் கலைத்திட்டம், பாடத்திட்டம், வேலைத்திட்டம்,பாடக்குறிப்பு என தொடர்கரும செயன்முறையில் ஆசிரியரின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.





மாணவர்களிடத்தே மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விசேட குறிக்கோளின் வாயிலாக தமது நோக்கத்தினை அடையும் வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் பாடக்குறிப்பினை தயாரித்துக் கொள்வது அவசியமாகும். அவ்வாறு தயாரிக்கும் போது மாணவர்களது ஆயத்தநிலை, மாணவர்களது விருப்பு, கற்றலுக்கான தமது ஆயத்த நிலை, வளங்களின் பயன்பாடு, பொருத்தமான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், நேரசூசி, பாடப்புலமை, பாடமுன் அனுபவம் என்பவற்றை கவனித்த பின்னரே விசேட குறிக்கோளினை அடைய முனைதல் வேண்டும். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் தம்மை தயார்படுத்துவதில்லை. மாணவரின் ஆயத்தநிலையினையும் கவனிப்பதில்லை.

எழுந்தமான முறையில் ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். பெரும்பாலும் ஒருசில ஆசிரியர்களே பாடக்குறிப்பினை முன் ஆயத்தம் செய்து கற்பித்து வருகின்றனர். வேலைத்திட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட பாடக்குறிப்பின் படி கற்பிக்க வேண்டிய விடயங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்வது சிறப்பானதும்,வினைதிறனான கற்பித்தலுக்கும் விளைதிறனான பெறுபேறுகளை பெறுவதற்கும் வழிவகுக்கும். எதிர்பார்த்;த இலக்கினை அடைபலய வேண்டுமெனில் தம்மை எப்போதும் தயார்படுத்திக் வைத்திருப்ப்துடன், புதிய விடயங்களையும் அறிந்து கொண்டு கற்பித்து வருகின்றனர்.





எப்போதும் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் திடிரென தலைப்பினை சொல்லி விட்டுக் கற்பிக்கக் கூடாது. முதலில் தலைப்புடன் தொடர்புடைய வேறு ஒரு தலைப்பில் கலந்துரையாடலை செய்து பின்னர் தலைப்பினைப் பற்றி பிள்ளைகளுக்கு அறிவினை வழங்கிய பின்னர் கற்பிப்பது சிறப்பான கற்பித்தலுக்கு வழிவகுக்கும். ஊதாரணமாக ஜனநாயகம் தரம் 09 மாணவர்கனுக்கு குடியியல் பாடத்தில் கற்பிக்க வேண்டுமெனில் நல்லாட்சி அரசாங்கம் மந்திரிசபை, சட்டமன்றம் பற்றி பேசிய பின்னரே ஜனநாயகம் பற்றி பேச வேண்டும்.அதன் பின்னரே ஜனநாயகம் பற்றி பேச வேண்டும்.





இன்றைய இரண்டாம் தரப் பாடசாலையில் பல்வேறு வகையான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களிடத்து சிறந்த நடத்தைமாற்றத்தை  ஏற்படுத்துவதே கற்றலின் விளைவாக அமைகிறது. மாணவரிடத்தே சிறந்த நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவற்கு பாடக்குறிக்கோள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். மாணவர்களது ஆயத்த நிலைக்கேற்ப மாணவர்கள் குறித்த பாடவேளையில் தம் கற்றலுக்கு எவ்வாறான நிலையில் உள்ளார்கள் என்பதை அறிந்த பின்னரே கற்பித்தலுக்குள் செல்ல வேண்டும். ஏனெனில் மாணவர்களது கற்றலுக்கான ஆர்வமே சிறந்த நடத்தை மாற்றத்திற்கு வழிவகுக்கும். ஆதனை விட அவர்களிடத்தே கற்றலுக்கான விருப்பமின்மை காணப்படின், அவர்களை கற்றலுக்குள் உள்வாங்க வேண்டிய  தந்திரோபாயத்தை வேலைத்திட்டத்திற்கிணங்க பாடத்திட்டம் தயாரிக்கும், போதும் பாடக்குறிப்பின் போதும் கற்றல் சாதனத்தையும் கவனத்திற் கொள்வது மட்டுமின்றி, எதிர்பார்க்கும் இலக்கினை அடையும்  வகையில் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.





 மாணவர்களிடத்தில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலாக விசேடகுறிக்கோள் வாயிலான குறிக்கோள், மாணவர்களது நிலையை அடிப்படையாகக் கொண்டு இன்றைய மாணவர் மையக் கற்பித்தலில் பல்வேறு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் கலைத்திட்;டத்தின் மூலமும், இணைப்பாடவிதான செயற்பாடுகளான இலக்கிய போட்டிகள், பாடவிதானம் சார்ந்த கணித, விஞ்ஞான, சமூக விஞ்ஞானப் போட்டிகள், விளையாட்டுக்கள், சாரணியர் மன்றம், சுற்றாடல் மன்றம் முதலான மன்றங்களின் தலைமைத்துவ செயற்பாடுகள் வாயிலாக மாணவர்கள் வளர்க்கப்படுவதுடன், தேசிய மட்டம் வரையிலாகவும் சாதனை படைத்து வருகின்றனர்.



இன்றைய கல்வி முறையில்  5E முறை அறிமுகப்படுத்தப்பட்டு பரவலாக காணப்பட்டது.  அதாவது  Engagement, Explanation,  Exploration, Elaboration, Evalutation ஆகியவை இடைநிலை கற்றல்  செயற்பாட்டில் அதிக செல்வாக்கினைப்  பெற்று  இருந்தது. ஆனால் இன்று 5E இன் செயற்பாட்டினை நடைமுறையில் சற்று பின்னடைவில் காணப்படுவதுடன் பல சர்ச்சைகள் சாதாரணமாக  வகுப்பறை  ஒன்றில்  அலகுப் பரீட்சை,  மாதாந்தபரீட்சை,  தவணைப் பரீட்சை வாயிலாகப் பெறும் நடத்தைமாற்றமே மாணவர்களது அளவு ரீதியானதும், பண்பு ரீதியானதுமான மொத்த  விருத்தியாக  அமைகிறது.



வாய்ப்புக்கள், கண்டுபிடிப்புக்கள் வாயிலாக விஞ்ஞானிகளாக அரும் சந்தர்ப்பங்கள் விவசாய பசளை உற்பத்தி, கூட்டுப்பசளைதயாரித்து சுய கைத்தொழில் உற்பத்தி முயற்சிகள் நிறுவனங்கள் சார்ந்தும் ஏற்படுத்தப்பட்டு;ம் வருகின்றன. வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறமைக்கு அப்பால் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் சீரிய நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இடைநிலை மாணவர்கள் பெறும் தேசிய மட்ட சாதனைகள் உயர்தரத்தில் அவர்களது  பல்கலைக்கழக அனுமதி சற்றுப் பிந்திய நிலையில் 25 புள்ளிகள் கணிசமாக வழங்கப்பட்டு பல்கலைக்கழக வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.

சிரேஷ்ட இடைநிலை மாணவர்களிடத்து கலை, வர்த்தகம் முதலான பாடங்களின் வாயிலாக எதிர்காலத்தில் வேலையற்ற தன்மையைப் புறந்தள்ளும் வகையில் 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பப் பாடம் நடைமுறையில் இருப்பதைக் காணலாம். 1981 ஆம் ஆண்டு கல்வி வெள்ளையறிக்கையின் படி, கைத்தொழில் உலகிற்கு தயார்படுத்தல் மற்றும் அது சார்ந்த மனப்பாங்குகளை ஏற்படுத்தல் எனும் தேசிய இலக்கினை அடையும் வகையில் வாழ்க்கைத்தேர்ச்சிப் பாடம் கொண்டு வரப்பட்டு விசேட குறிக்கோளும் அடையப்பட்டது.



ஆனால் 1948 இல் நற்பிரஜையை உருவாக்குதல் தேசிய இலக்காக அமைந்த போதும் ஆனால் இன்று வரை அது அடையப்படவில்லை. காரணம் மாணவரிடத்தில் சிறந்த நடத்தை மாற்றத்தை உருவாக்கும் வகையில் விசேட குறிக்கோள் உருவாக்கப்படவில்லை என்றே கூற வேண்டும்.அதை விட இன்று காலத்திற்குக் காலம் கல்வியின் கொள்கையில் பல புதிய திருப்பு முனைகள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்மையக் கல்வி, 5E Method தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறைமை எனப் பல காணப்படுகின்றன. எனினும் வகுப்பறையைப் பொறுத்த வரை 40 நிமிட விசேட குறிக்கோளை அடையும் வகையில் மதிப்பீடு இடம்பெற்று வருகின்றது.

இதன்படி மதிப்பீடானது மாணவர்களது அளவு, பண்பு ரீதியான விருத்திகளை அளவிடும் வகையில் இடம்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 40 நிமிடத்திற்கு அமைவாக பாடக்குறிக்கோளை அடையும் வகையிலான பாட இலக்கம்இ தேர்ச்சி மட்டம்இ கற்றல் பேறு, விடயம், கற்பித்தல் முறை, கற்றல் தரவுள்ளீடுகள் என்பன இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் அமைப்பு ரீதியான மதிப்பீடு, ஆய்ந்தறி மதிப்பீடு, தகுதி காண் மதிப்பீடு, கூட்டு மதிப்பீடு என்பன சிறந்த நடத்தை மாற்றத்தை மாணவரிடத்து ஏற்படுத்தும் வகையில் அளவு, பண்பினை அளக்கப் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் நன்று, மிக நன்று, சாதாரணம், முன்னேற இடமுண்டு என தேர்ச்சியறிக்கையின் பின்னால் எழுதுவதும் பண்பு ரீதியான விருத்தியை வெளிப்படுத்தும். கற்றல் மூலம் மாணவர்களிடத்து அறிவு, திறன், மனப்பாங்கு தொடர்பில் முழுமையான மாற்றத்தை இன்றைய வகுப்பறைக் செயற்பாடுகள் வாயிலாக அடைய முடியவில்லை என பல சர்ச்சைகள் காணப்படுகின்றன.

10,100க்கு மேற்பட்ட பாடசாலைகளும், 2.5 இலட்சத்திற்கு  மேற்பட்ட ஆசிரியர்களையும், 20 இலட்சத்திற்கு  மேற்பட்ட மாணவர்களையும்  கொண்டமைவதுடன் அரசாங்கத்தின் கல்விக்கான குறைந்த முதலீடு, அதிகரித்த மாணவர், ஆசிரியர்கள், ஆசிரியர்களது சம்பளம், இடமாற்றம், பதவியுயர்வு, தரமுயர்த்தல்,அரசியல்மயமாக்கம், ஆசிரியர்களது வேலைச்சுமை, மாணவர்களதும், ஆசிரியர்களதும் மனஅழுத்தம் அதிகரிப்பு, அரசாங்கத்தின் அசமந்தப் போக்கு என பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.



கற்றல் என்பது நீண்ட கால நடத்தை மாற்றம் ஆகும். அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றுதல், தொழிநுட்ப பாடங்களின் வருகை, கற்றல் பேறுகளை அடிப்படையாகக் கொண்ட தேர்ச்சிமட்டம், க.பொ.த சாதாரணத்தில் சித்தி அடையத் தவறிய மாணவர்களுக்கு செயன்முறையுடனான தொழிற்கல்வி என காலத்திற்கு காலம் பல மாற்றங்களும் கல்விச் சீர்திருத்தங்களும், கல்வி மறுசீரமைப்புக்கள் காலத்திற்கு காலம் இடம்பெற்று வருகின்றன. எனினும் தேசிய குறிக்கோளினை அதாவது தேசிய இலக்கினை,வகுப்பறைமட்;ட விசேட குறிக்கோளினை அடையும் வகையிலாக இடம்பெறும் வகுப்பறைச் செயற்பாடுகள் மூலம் நீண்ட காலத்திற்கு பின்னரான முயற்சியின் வாயிலாகவும் அடைய முடியவில்லை எனலாம். 

                                                      க. அபிலாஸ்
                                              கல்வியியல் சிறப்புக்கற்கை 
                                                     விடுகை வருடம்
                                               கிழக்குப் பல்கலைக்கழகம்