புலமைப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவனுக்கு அதிபர் மற்றும் மக்கள் வங்கி ஊழியர்களால் பாராட்டு


அண்மையில் வௌியான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று (196 புள்ளிகள் பெற்று ) முதன் நிலையில் தெரிவான, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் உன்னிச்சை 6ம் கட்டை (நெடியமடு) பாடசாலை மாணவன் செல்வன் ஜெயராஜ் துஹின் ரறேஷ் எனும் மாணவனை பாராட்டி மகிழ்வித்த நிகழ்வு கடந்த 08ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.பேரானந்தம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வினை மட்டக்களப்பு மக்கள் வங்கி நகரக்கிளை ஒழுங்கு செய்திருந்தது.

இந் நிகழ்வில் சித்தியடைந்த மாணவனால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், மாணவனுக்கு பொன்னாடை அனிவித்து பாராட்டுத் தெரிவித்ததுடன், அவர் பெயரில் ஒருதொகை பணமும் வைப்பிலிடுவதாக வங்கி அதிகாரிகளால் கூறப்பட்டது.

இந் நிகழ்வின்போது பாடசாலை அதிபர் உரையாற்றுகையில், இம்மாணவன் எமது பாடசாலைக்கு மட்டுமல்லாமல் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பொயரையும் புகழையும் ஈட்டித் தந்துள்ளார். இதற்காக நான் இம் மாணவனுக்கும் அவர் பெற்றோருக்கும் நன்றியினைத் தெரிவிக்கின்றேன். எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் வங்கி, உதவி பிராந்திய முகாமையாளர் கே.கோடீஸ்வரன் உரையாற்றுகையில், செல்வன் ஜெயராஜ் துஹின் ரறேஷ் போன்று ஏனைய எதிர்காலத்தில் ஏனைய மாணவர்களும் சிறந்தமுறையில் கல்விகற்று நற்பிரஜைகளாக திகழவேண்டும்.

சிறு வயதில் ஊக்கத்துடன் செய்யும் நற்காரியங்கள் அனைத்தும் நம் வாழ்வின் இறுதிவரை சிறந்ததாகவே அமையும் அது கல்வியாக இருக்கலாம், சேமிப்பாக இருக்கலாம் அல்லது உதவிகளாக இருக்கலாம். சிறுவயதில் கல்வி பயிலும்போதே சேமிப்பு எனும் பழக்கத்தினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவை இரண்டும் எமது எதிர்காலத்திற்கு உதவியளிப்பவை. என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மக்கள் வங்கி, உதவி பிராந்திய முகாமையாளர் கே.கோடீஸ்வரன், நகர கிளை முகாமையாளர் கே.நித்திலன், BPO வீ.சிராணி, எஸ்.சரணியா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.சபேசன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.