பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழா



(சித்தா)
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் இணைந்து கல்விக்கரசியாம் சரஸ்வதிதேவிக்கு விழா எடுத்தனர். பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் விசேட பூசைகளும், கலை நிகழ்வுகளும், சொற்பொலிவுகளும் இடம்பெற்றன.


இந் நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.மனோகரன் கலந்து விழாவினைச் சிறப்பித்தார். வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் அவர்கள் தமது உரையில் நவராத்திரி விழாவானது ஒரு முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றுடன் தொடர்பான வழிபாடாக இது அமைகின்றது. இம் மூன்றும் சிறந்த வாழ்வுக்கு அவசியமானதொன்றாகும். அதாவது ஒருவரிடம் வீரம், செல்வம், கல்வி என்பன காணப்படும் பட்சத்தில் அவனது வாழ்க்கை சிறப்புப் பொருந்தியதாகக் காணப்படும். இதனால் தான் முறையே துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி எனும் தெய்வங்களை வழிபடுகின்றனர். அதன் முக்கியத்துவம் உணர்ந்து உலக நாடுகளில் வசித்து வரும் புலம் பெயர் இந்துக்களால் உலகெங்கிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது.


20 ஆம் நூற்றாண்டில் உலகிற்கு அடிப்படை சக்தி என்பதை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். ஆனால் மெய்ஞானிகள் குறிப்பாக இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதனைக் கண்டறிந்து வழிபட்டுள்ளமையை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. சமயங்களின் இறுதி இலக்கு ஒன்றுதான். எனவே ஒவ்வொரு மதங்களின் நம்பிக்கைகள், பிரார்த்தனைகள், வழிபாடுகளை ஏனைய மதத்தவர்களும் அறிந்து மதித்து நடந்து கொள்வதன் மூலம் எமது வாழ்வியலைச் சிறப்பாக்கிக் கொள்ளமுடியும். என்றார்.