பெரியோர்; சொல் கேட்டு நடக்கும் பிள்ளை பாதுகாப்பாக இருக்கும்


'பெரியோர் மற்றும் பெற்றோர் தாங்கள் கொண்ட அநுபவம் மற்றும் அறிவு என்பவற்றின் அடிப்படையிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு ஆலோசனையும் அறிவுரையும் கூறுகின்றனர். அவற்றை பின்பற்றுகின்ற பிள்ளைகள் வாழ்க்கையில் ஆபத்து இன்றியும் பிரச்சினைகள் இன்றியும் வாழ முடியும்'

ஐயங்கேணி கிராமத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்ச்சியின்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்.


இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய த.வசந்தராஜா 'இன்று நமது நாட்டிலும்கூட விரும்பத்தகாத பல சம்பவங்கள் சிறுவர்களுக்கு நடந்து விடுகின்றது. ஆபத்தான மனிதர்களையும் ஆபத்தான இடங்களையும் சம்பவங்களையும் பிள்ளைகள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அனுபவசாலிகளான பெற்றோர் மற்றும் பெரியோர் இவற்றை ஓரளவேனும் அறிந்திருப்பர். அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் அவர்கள் அறிந்திருப்பர். தாங்கள் அறிந்துள்ள விடயங்களை தேவையான சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துவர். அதனை பிள்ளைகள் கேட்டு நடந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளும்போது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க முடியும். அது மட்டுமல்லாது பெற்றோரும் பிள்ளைகள் மீது கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். பெற்றோர் மிகவும் புத்திசாலித்தனமாகவும் விடயங்களைக் கையாளுதல் வேண்டும். இல்லையேல் ஆபத்தை விலைக்கு வாங்கியவர்களாகி விடுவோம் என்றார்.

ஐயங்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் க.கமல்ராஜின் தலைமையில் ஐயங்கேணி கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊர்ப்பெரியவர்கள், பெற்றோர் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், ஏறாவூர்ப்பற்று வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் கல்விக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் எஸ். அமுதன் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர். பேச்சு, பாடல், நடனம் ஆகிய கலை நிழ்வுகளில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கு வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் கல்விக்கு பொறுப்பான உத்தியோகத்தர் பரிசிப் பொருட்களையும் வழங்கி வைத்தார்