பெண்களின் கழுத்திலிருக்கும் தங்க சங்கிலிகளை திருடி வந்த நூதன திருடன் சிக்கினான்

தனியாகச் செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலிகளை சாவகாசமாகத் திருடும் இளைஞன்  நேற்று செவ்வாய்க்கிழமை  பொலிஸாரின் பிடியில் சிக்கியதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்


இச்சம்பவம் தொடரிபில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில நாட்களாக வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் ஆங்காங்கே சில இடங்களில் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலிகளை இளைஞன் ஒருவன் அபகரித்துச் செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த வாழைச்சேனைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடியைச் சேர்ந்த 20 வயதான இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த  நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது ஏற்கனவே திருடப்பட்டவற்றில் ஒரு தங்கச் சங்கிலி மீட்கப்பட்டதாகவும் ஏனையவைபற்றி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள காயான்கேணி, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் தனியாகச் செல்லும் பெண்கள் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலிகள் திருட்டுப் போவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி முஹம்மத் றிஸ்வான் உத்தரவிட்டார்.