குற்றத்தை நிரூபிக்காமல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது முறையல்ல!

அரசியல் கைதிகள் விவகாரம் தற்போது முக்கியமானதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது.

பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்களா? இல்லையேல் சிறிது காலத்துக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவரா? இவையிரண்டுமே இல்லாத பட்சத்தில், அவர்கள் மீதான வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படாதோர் விரைவில் விடுவிக்கப்படுவார்களா?

இவ்வாறான ஊகங்களுக்கு வெகுவிரைவில் பதில் கிடைத்து விடுவதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்றன.

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டொரு தினங்களில் தீர்க்கமான முடிவொன்றை அறிவிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவிருப்பதாகவும், அச்சந்திப்பின் போது அரசியல் கைதிகள் விடயம் குறித்து அறிவிக்கப்படுமென்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுமுன்தினம் முடிவுக்கு வந்திருக்கிறது.

தங்களை விடுதலை செய்யுமாறும், இல்லையேல் வழக்குகளைத் துரிதப்படுத்தி தீர்ப்பை அறிவிக்குமாறும் வலியுறுத்தி அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர், இக்கைதிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நடைபவனியாக தென்னிலங்கையை நோக்கி வந்தனர். இவர்களுடன் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இடையில் வந்து இணைந்து கொண்டனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதி அளித்திருந்த உறுதிமொழியை சிவில் சமூகத்தினர் அரசியல் கைதிகளிடம் எடுத்துக் கூறியிருந்தனர். அதனையடுத்தே உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘ஜனாதிபதி இவ்விவகாரத்தில் உறுதிமொழியொன்றை வழங்கியிருக்கிறார். தமிழ்க் கூட்டமைப்பினரும் இவ்விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே இவர்களுக்கு அவகாசமொன்றை வழங்குவதற்காகவே உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளோம்” என்று அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இவ்விவகாரம் மேலும் இழுத்தடிக்கப்படுமானால் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை அரசியல் கைதிகள் ஆரம்பிப்பரென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கைதிகளுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் சாத்விக ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அரசியல் கைதிகளாக 107 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மிக நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். தடுத்து வைக்கப்பட்டிருப்போரில் பலருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லையெனத் தெரிகின்றது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் கூட நிரூபிக்கப்படாத நிலையில், இவர்கள் பல வருட காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

புலிகள் இயக்கத்துடன் இவர்களுக்கு தொடர்பிருப்பது உண்மையானால் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் துரிதமாகவே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

குற்றத்தை நிரூபிக்க முடியாமல், இவ்வாறு பல வருட காலமாக அவர்களை தடுத்து வைத்திருப்பது நியாயமல்ல. குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் அவர்களை விடுதலை செய்வதே நீதியும் நியாயமும் ஆகும்.

குற்றவாளி தண்டிக்கப்படாமலிருப்பதைப் பார்க்கிலும், குற்றமிழைக்காதவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் கொடுமையாகும். இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதானது, ஒரு வகையில் நோக்கும் போது சிறைவாசம் போலவே தென்படுகின்றது. அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகளாக இருப்பார்களானால் இத்தடுத்துவைப்பு உண்மையிலேயே அநீதியானது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் மற்றும் படையினரால் கைது செய்யப்பட்ட புலிகள் பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யுத்தத்தை வழிநடத்திய புலிகளின் தளபதிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் செயற்பட்ட போராளிகளும் சமூகத்தில் தற்போது சுதந்திரமாக உலவித் திரிகையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இவ்வாறு இன்னுமே சிறைவாசம் அனுபவித்து வருவது நியாயமானதல்ல.

இது ஒருபுறமிருக்க, விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும், அரசியல் கைதிகள் என்பதன் பேரில் இவர்களை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருப்பது முறையற்றதென்பதே பலரதும் கருத்தாக இருக்கின்றது.

இனமுரண்பாடு உச்சத்தில் உள்ள நாடாக இலங்கையை சர்வதேசத்துக்கு இன்னும் அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதற்கே அரசியல் கைதிகளின் தடுத்துவைப்பு வழியேற்படுத்தும்.

ஆயுதப் போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நாடுகளில் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதும், கைதிகளைப் பரிமாறிக் கொள்வதும் புதுமையான அனுபவங்கள் அல்ல. இதுவொரு அரசியல் நாகரிமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் விடயத்தில் இழுத்தடிப்பை இன்னும் தொடருவது முறையல்ல. அவர்களை விடுதலை செய்வது தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வழியேற்படுத்துமென்பதை மறந்து விடலாகாது.