ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு பாதையாத்திரை - 2018


(கோ. ஜெகதீஷ்)

நவம்பர் 14ம் திகதி ஆகிய உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அனுமதியுடன் எமது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட பொறுப்பதிகாரி Dr.S.F.அல்மெடா அவர்களின் தலைமையில் மாபெரும் உலக நீரிழிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.


இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக நீரிழிவு நோயின் தாக்கமும் அதன் வகையும் அதனால் ஏற்படும் பாரிய உயிராபத்துக்களும் பற்றிய விழிப்புணர்வை எம்மக்களிடையே ஏற்படுத்தும் முகமாக இவ்வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய சகோதர சகோதரி உட்பட ஏனைய தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார பணியார்கள், வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு அடங்கலாக ஆரையம்பதி சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ஆரையம்பதி பிரதேச செயலக செயலாளர், உத்தியோகத்தர்கள், ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து இந்நிகழ்வினை ஒழுங்குபடுத்தி வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நீரிழிவு நோய் பற்றிய பல்வேறு தகவல்களையும் எச்சரிக்கைகளையும் சுகாதார அறிவுரைகளையும் தாங்கிய பதாதைகளை அனைவரும் தாங்கிச் செல்ல Nestle Health Science நிறுவனத்தின் அனுசரணையுடன் நீரிழிவு நோய் பற்றிய தகவல் அடங்கிய புத்தகங்களும் துண்டுப்பிரசுரங்களும் பாதையாத்திரையின்போது பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அத்துடன் தண்ணீர் போத்தல்களையும் வழங்கி Nestle Health Science நிறுவனம் பதையாத்திரையை சிறப்பாக நடைபெற உதவி செய்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பாதையாத்திரையானது வைத்தியசாலையில் ஆரம்பித்து பிரதான வீதியினூடாக ஆரையம்பதி 4ம் கட்டை சந்தியினூடாக காத்தான்குடி கடைத்தொகுதியினூடாக சென்று வைத்தியசாலையினை வந்தடைந்தது. முடிவில் பொதுமக்களுக்கு குருதியின் வெல்ல மட்டத்தை குறிப்பிடும் குருதிப்பரிசோதனையும் (capillary blood sugar) மேற்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும். இதன்போது 35ற்கும் மேற்பட்ட புதிய நீரிழிவு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் நலன் கருதி இவ்மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு பாதையாத்திரையை பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் நிகழ்த்துவதற்கு துணைநின்ற அனைத்து உள்ளங்களுக்கும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.