ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையாக தரமுயர்வு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம், தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அனுமதிக்கடிதத்தினை கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

குறித்த கடிதத்தினை பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (14) கிழக்கு மாகாண ஆளுநரின் கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம கடிதத்தினை பாடசாலை அதிபர் எம்.எம்.முகைதீனிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் சியாவுல் ஹக், மற்றும், பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்திக்குழுவினர், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு ஆளுநர் குறிப்பிடுகையில்,

கிழக்கு மாகாண ஆளுநராக தான் பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் முதலாவதாக தேசிய பாடசாலையாக உங்களது பாடசாலையினையே தரமுயர்த்தியுள்ளேன். கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் ஏறாவூர் பிரதேச மக்களுக்கும், குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கும் அளப்பெரிய சேவைகளை செய்தவர். ஜனாதிபதிக்கும் நெருக்கமான ஒருவர், அவரது கோரிக்கைக்கிணங்கவே, குறிப்பாக ஜனாதிபதியின் அனுமதி மற்றும் ஆசிர்வாதத்தினை பெற்று உங்களது பாடசாலையினை தரமுயர்த்தியுள்ளேன் என்றார்.

ஏறாவூர் பிரதேசத்தில் சுமார் 60வருட காலமாக இயங்கி வரும் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயமானது, கடந்த காலங்களில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் என சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு, தேசிய ரீதியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதற்கு அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு, பழைய மாணவர்களின் அர்ப்பணிப்புக்களே பிரதான காரணமாகும்.

குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் மற்றும் பழைய மாணவர்கள் அப்பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தித் தருமாறு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிரிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்க, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை நேரில் சந்தித்து மாக்கான் மாக்கார் வித்தியாாலயத்தினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தித்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கினங்க, குறித்த பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் பிரகாரம் முன்னாள் அமைச்சர் சுபையிரின் விடா முயற்சியினால், குறித்த பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு, உத்தியோகபூர்வ அனுமதிக்கடிதமும் நேற்றை கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் பொருட்டு, தனது முயற்சினை கைவிடாது, தீவிரமாக செயற்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.