கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை - வியாழேந்திரன் !


மக்களாலேயே தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே தான் இன்று பிரதி அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வியாழேந்திரன் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து வெளியிட்ட போது இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எனக்கு வாக்களித்த என் உறவுகளுக்கு நன்றாக தெரியும். அந்த மக்களின் தேவை என்ன என்பதையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து தான் செய்கின்றேன்.

வெறும் வெத்துப் பேச்சுக்களையும் பின்கதவு முயற்சிகளையும் விட்டு எம் மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதன் படியே நான் சிந்தித்து செயற்பட்டேன் தொடர்ந்தும் செயற்படவுள்ளேன்.

தயவு செய்து ஊடக தர்மத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளும் ஊடகவியலாளராக இருந்தால் இரு பக்க நியாயத்தை அறிந்து செய்தியை வெளியிட வேண்டும் என பணிவாக கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், எனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து மீண்டும் வாக்கு கேட்க விருப்பமும் இல்லை அதற்கான எண்ணமும் இல்லை. காரணம் கூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு இருக்கிறது.

அந்த குற்ற உணர்வுடன் கூட்டமைப்பை சொல்லி மக்கள் முன்சென்று வாக்கு கேட்க என் மனசாட்சி இடம்கொடுக்கவில்லை. இந்த நிலையில், நான் எப்படி கூட்டமைப்போடு இணைய விரும்புவேன்.

ஊடகங்கள் சில நான் கூட்டமைப்போடு இணைய முற்படுவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சரூடாக சம்பந்தன் ஐயாவுடன் முன்னெடுத்ததாகவும் வெளியான செய்தி முற்றிலும் மகா பொய்யானது.” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


ஐ.தே.கவின் மலிக் சமரவிக்கிரம வியாழேந்திரனை இணைத்துக் கொள்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இணைத்து கொள்வீர்களா?“ என சம்பந்தனிடம் கேட்கப்பட்டபோது அவர் இனி நமக்கு வேண்டாம் என சம்பந்தன் பதில் வழங்கியதாக வெளியான செய்தி தொடர்பிலே எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு கருத்தை தெரிவித்தார்