ஹஜ் விவகாரங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஹஜ் கமிட்டி தொடர்ந்தும் இயங்கும்



நாட்டில் எவ்வாறான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும் ஹஜ் விவகாரங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தற்போது இருக்கின்ற ஹஜ் கமிட்டி கலைக்காமல் தொடர்ந்தும் இயங்கும் என முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஹஜ் விவாகரங்களுக்கான நடவடிக்கைகள் எதிர்வரும் இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் அமைச்சரவை மாற்றம் மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாக ஹஜ் விவகாரம் பாதிக்கப்படும் என சமூக மட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு தனி அமைச்சாக எவருக்கும் வழங்கப்படவில்லை. இருந்தாலும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள முஸ்லிம் சமய, அலுவல்கள் திணைக்களம் விசேட வர்த்தமானி மூலம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
அதற்கமைய, முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த அவர் அங்கு விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். இதன்போது, தற்போதுள்ள ஹஜ் கமிட்டியை கலைக்காமல் தொடர்ந்து இயங்குமாறு பணிப்புரை வழங்கியதோடு, ஹஜ் விவகாரங்களில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். 

அத்துடன், சட்டரீதியாக ஹஜ் கமிட்டி ஒரு சுயாதீன குழுவாக சுதந்திரமாக செயற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதாகவும், புனித ஹஜ் கடமை எவ்வித பாதிப்புக்களுமின்றி கடந்த காலங்களை விட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.