வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களுக்கு முன்னாள் கிழக்கு அமைச்சர் விஜயம்





மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன பல பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர். அவ்வாறு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்தத்தினால் பாதிப்புற்று பாடசாலைகளில் தங்கியிருக்கும் உறவுகளைப் பார்வையிடுவதற்காக இன்றைய தினம் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் விஜயம் மேற்கொண்டார்.


நாளை (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள அனர்த்த முகாமைத்தவம் தொடர்பான கலந்துரையாடலில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கே இன்றைய தினம் அவர் இந்த விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன் போது வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊரியன்கட்டு, கண்டலடி, மற்றும் தட்டுமுனை போன்ற பிரதேசப் பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடியதுடன் குறிப்பிட்ட பிரதேச கிராம சேவகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இவ்விஜயத்தின் போது கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பா.முரளிதரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
அதனைத் தொர்ந்து ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் 04 பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள் தொடர்பில் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். இதன் போது ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களான சுதாகரராசா மற்றும் சுதாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன் போது ஏறாவூர் நகரசபைத் தலைவரைத் தொடர்பு கொண்டு வெள்ளம் வடிந்தோடச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதுடன் பிரதேச நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.