பொதுத் தேர்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் கருத்து ஒரு மாயை




உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பொதுத் தேர்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் கருத்து ஒரு மாயை ஆகும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இறுதித் தீர்ப்பல்ல. நீதிமன்றம் விதித்துள்ள தற்காலிக தடை உத்தரவுக்கு மதிப்பளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் பொதுத் தேர்தல் இரத்துச் செய்யப்படவில்லை. தற்காலிக தடை மாத்திரமே விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதனை முறியடித்து பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயகத்தை ஏற்படுத்தி மக்களுக்கான உரிமையை பாதுகாப்பதே எமது நோக்கமாகும். மக்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபாநாயகராலோ பாராளுமன்றத்தினாலேர் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாது. இதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு மாத்திரமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உயர்நீதிமன்றம் சந்தர்ப்பம் அளித்துள்ளது. இதன் மூலம் தேர்தல் நடத்தப்படும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படவில்லை என்பதனால் அதன் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார். இந்த மனுக்கள் மீதான விசாரணையை இதையும் விட விரிவான நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடத்துமாறு கோருவதற்கும் இதற்கு சேவை பெறுனர்களுக்கு உரிமை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிடுகையில்., இந்த நீதிமன்ற உத்தரவின் மூலம் பிரதமர் நியமனமோ, அமைச்சரவை நியமனமோ ரத்தாகவில்லை என சுட்டிக்காட்டினார்

தேர்தலுக்கு அஞ்சி அதனைத் தவிர்ப்பதற்காக உயர்நீதிமன்றம் சென்ற முதலாவது எதிர்க்கட்சி தற்போதுள்ள எதிர்க்கட்சியாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். சபாநாயகருக்கு பாராளுமன்றத்தைக் கூட்டும் சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என்றும் சபாநாயகரின் செயற்பாட்டை கடைப்பிடிக்க வேண்டாமென்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பின் மூலம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்தாகவில்லை என அமைச்சர் பைசர் முஸ்தபாவும் சுட்டிக்காட்டினார்.