காணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்






ஏறாவூர் பகுதியில் நேற்று புதன்கிழமை பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்டிருந்த சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுமி நேற்றுபுதன்கிழமை பாடசாலைக்குப் சென்றிருந்த நிலையில் பாடசாலைக்கும் செல்லாது வீட்டுக்கும் திரும்பாது காணாமல் போயிருந்தார் என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

மயிலம்பாவெளியிலுள்ள பாடசாலையொன்றில் 6ஆம் ஆண்டு கற்கும் குறித்த சிறுமி புதன்கிழமை மாலை வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மட்டக்களப்பு நகரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.



வழமைபோன்று இந்தச் சிறுமி சவுக்கடியிலுள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு மைலம்பாவெளியிலுள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்று அங்கு வைத்து சீருடைகளை மாற்றிக் கொண்டு பாடசாலை செல்வது வழக்கம்.

ஆயினும், நேற்று அவர் பாடசாலை சென்றிருக்கவில்லை என்று பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்தததையடுத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

தான் முன்னதாக தனது வீட்டிலிருந்து மைலம்பாவெளிக்கும் பின்னர் அங்கிருந்து செங்கலடிக்கும் பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்றதாக சிறுமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.