தொலைபேசி பாவனையும் இன்றைய மாணவர்களின் நிலையும்.



தகவல் தொடர்பாடல் சாதனம் என்பது ஒரு கருத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்யும் முறையாகும். அவற்றில் இன்று உலகையே ஒரு சட்டைப் பையினுள் சுருக்கி வைத்திருக்கும் ஒரு கருவியாக கையடக்க தொலைபேசிக் காணப்படுகின்றது. தொலைபேசி சமுகத்தில் உள்ள அனைத்து நபர்களிடமும் செல்வாக்குப் செலுத்தும் அதே வேளை மாணவசமுகத்தில் இது பாரிய மாற்றத்தினைப் பெற்றுவருகிறது. இன்றைய மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளையும் மறந்து தொலைபேசியின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றனர்.மாணவர்கள் தங்களைச் சுற்றி நடப்பவை யாது? ஏன புரியாத அளவிற்கு அதன் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக காணப்படுகின்றார். தங்களைச் சுற்றி நடக்கும் எந்த சிந்தனையும் அற்றவர்களாகக் காணப்படுவதுடன் கற்றலில் ஈடுபாடுக்காட்டுவதில்லை. மாறாக நேர வீண்விரயத்தை தொலைப்பேசி விளையாட்டுக்கள் முகபுத்தகங்களின் பாவனை என்பவற்றில் செலவிடுகின்றனர்.தொலைபேசி விலையாட்டு மீதான இவர்களின் ஈடுபாடு உணவு உறக்கம் என்பவற்றை மறக்கடிக்கும் அளவில் அதில் ஈடுபாடுகொள்கின்றனர். சில நேரங்களில் பாடசாலைக்குக் கூட செல்லாமல் தொலைப்பேசி விளையாட்டுக்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

 அண்மைக்காலங்களில் ப்ளூ வெல் கேம்  உலகையே உலுக்கிய ஒரு சம்பவமாகும். இது பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் பாரிய உயிர் தாக்கத்தை ஏற்படுத்திய விளையாட்டாகும். அத்துடன் சில விளையாட்டுக்களை விளையாடும் இவர்கள் வேறு எந்தவித சிந்தனையும் அற்றவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்கள் இவ் விளையாட்டுகள் உடற்பயிற்சி என்ற ஒரு விடயத்தையே மறந்துவிடுகிறார்கள். இது மாணவர்களின் உடல்சார் நோய்களை தோற்றுவிப்பதுடன் ஒரு உற்சாகத்துடன் அவர்கள் செயற்படுவதைக் குறைத்துவிடுகிறது. மாணவர்களிடத்தில் முகப்புத்தகங்களின் பாவனையானது கலாசாரப் பண்பாட்டு சீர்கேடுகளையும் நடத்தை பிறழ்வுகளையும் ஏற்படுத்துகின்றது. முன் அறிமுகமில்லாதவர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தி நடத்தை பிறழ்வான செயற்பாடுகளை செய்வதுடன் காதல் வயப்படல் தற்கொலைகளை செய்துக்கொள்ளல் என்பவற்றுக்கு உள்ளாகின்றனர். மாணவர்கள் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட மோகம் பாடசாலைகளுக்கு தொலைப்பேசிகளைக் கொண்டுச்சென்று அங்கும் கூட கற்றல் விடயங்களில் ஈடுபாடு காட்டுவதை குறைத்துக் கொள்கின்றனர்.

இன்று அதிகமான மாணவர்களிடத்தில் தொலைப்பேசியின் தாக்கம் வாட்ஸப் ,ய்யமோ, வைபர்    என்பவற்றினால் ஏற்படுகின்றது. அதாவது இவ் அனைத்து தொலைப்பேசியின் சமுக வலைத்தளங்கள் தமது நண்பர்களுடன் உரையாடவும் காணொளியில் கதைக்கவும் அதிகம் விருப்பம் கொண்டவர்களாகவும் அதிகமான நேரங்களை இவற்றுடனேயே செலவிடுகின்றனர்.  வாட்ஸபில்  ஸ்ரேட்டஸ்   போடுவதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். தமது ஸ்ரேட்டஸ் எத்தனை பேரால் பார்க்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் உளவியல் ரீதியாக மாணவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொலைப்பேசிகளில் நேரம் பார்த்து பழகிக் கொண்ட மாணவர்களுக்கு கடிகாரத்தைப் பார்த்து நேரம் சொல்லும் தன்மை தெரிவதில்லை. தொலைப்பேசிகளில் இலகுவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நேரத்திற்கு இசைவாக்கமடைந்தவர்களாக மாணவர்கள் காணப்படுகின்றார்கள். அத்துடன் மாணவர்களிடத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பும் நிலையானது மொழி விருத்தியை தடைசெய்து வருகிறது. தொலைப்பேசியைப் பயன்படுத்தும் மாணவர்கள் சமுக நல்லுறவுகள் அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். அருகில் உள்ள மனிதர்களையும் இவர்கள் அறிவதில்லை. சமுகத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களையும் பற்றிய எண்ணமும் அற்றவர்களாக தங்களது உலகையே ஒரு தொலைப்பேசியில் அடக்கிவிடுகின்றார்கள். தொலைப்பேசியின் அதிகர்த்தப் பாவனை அவற்றைப் பாடசாலைக்கு கொண்டு செல்வதை அதிகமாகக் காணலாம்.

இன்றைய மாணவர்கள் தமது செல்பீ  மோகத்தால் அதிகமாக உயிரை விடும் நிலையைக் காணலாம். அதாவது செல்பீ எடுத்துக் கொள்ளவும் அதனை முகப்புத்தகம் வாட்ஸபில்  என்பவற்றில் பதிவேற்றம் செய்யவும் அதிக ஈடுபாடுக் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் பிறரை விட தம்மை வித்தியாசமாகக் காட்டிக் கொள்ளும் எண்ணம் அச்சமுட்டும் இடங்களில் செல்பீ எடுத்து தங்களின் உயிரை விடும் நிலைக்கும் அவர்களை தள்ளிவிடுகின்றனர்;. அத்துடன் அதிகமாக அவ்வகை புகைப்படங்களை எடுத்து நரம்பு தொடர்பான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுகின்றனர். வாசிப்பு தேடல் எழுத்து என்பனக் காலப்போக்கில் மாணவர்களிடத்தில் மறந்து விடும் நிலைக்கு வந்துள்ளது. வாசிகசாலைப் பாவனை என்பது இன்று மாணவர்கள் மத்தியில் காணமுடியாத ஒன்றாக உள்ளது. முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் போன்ற சமுகவலைத்தலங்களில் தங்களை பிறர் விரும்பும் நிலைக்காக தங்களது இயல்புகளை மாற்றிக் கொண்டு போலியான ஒரு வாழ்க்கையை மாணவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தொலைப்பேசி வாங்கிக் கொடுத்தால் மட்டுமே பாடசாலைக்கு செல்வதாக பெற்றோர்களிடத்தில் அச்சமுட்டுவதுடன் தொலைப்பேசிக்கு மீள் நிரப்பு அட்டைகளை வாங்கிக்கொள்ளும் பொருட்டு சொந்த வீடுகளிலேயே திருடுபவர்களாகவும் காணப்படுகின்றார்கள். அதிகமான நேரங்களில் தொலைப்பேசி பாவனையின் விளைவு கண் பார்வைத் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இரவு நேரங்களில் தொலைப்பேசிகளை மின்னேற்றம் செய்து கொண்டே பாடல்களை கேட்டுக் கொண்டு உறங்கி விடுகின்றார்கள்.

அதனால் தொலைப்பேசி சூடாகி வெடிக்கும் நிலையும் காணப்படுகின்றது. தொலைப்பேசிகளில் தகாத காணொளிகளை பார்த்தல் அவற்றை வைத்து துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடல் என்பன இன்று அதிகமாக மாணவ சமுகத்தில் காணக்கூடிய ஒரு பிரச்சினையாகவே உள்ளது. தமது கற்றலுக்காக மட்டுமே தொலைப்பேசிப் பாவனையை மாணவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. இரவு நேரங்களில் அதிகமாக கண் விழித்து தொலைப்பேசியைப் பாவித்துவிட்டு அடுத்த நாள் பாடசாலைக்கு சென்று கற்றலில் ஈடுபாடு அற்றவர்களாகவும் சோர்வான ஒரு தன்மைக்கும் தள்ளப்படுகின்றார்கள். பொதுவாக கனிஸ்ட இடைநிலை மாணவர்கள் வயது கோளாறு காரணமாக பாடசாலைக் காலங்களில் காதல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளதால் அதிகமான உரையாடல் பிரச்சினைகள் என்பன காரணமாக தற்கொலைகளை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். பரீட்சை காலங்களிலும் தொலைப்பேசியைப் பாவித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபாடு காட்டுவதும் இல்லை. மேலதிக வகுப்புக்களுக்கும் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். சமுக ஊடகங்களின் மீதான விருப்பம் புத்தகங்கள் மீதான வெறுப்பை தோற்று வித்துள்ளதே இன்றைய மாணவர்களின் நிலையாகும்.

இவ்வாறான நிலையில் காணப்படும் மாணவர்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனத்தில் எடுத்து அவர்களைக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தவும் கற்றல் செயற்பாடு மீதான ஈடுபாட்டை மாணவர்களிடத்தில் தோற்றுவிக்கவும் வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்கள் மத்தியில் தொலைப்பேசி பாவனையை குறைத்துக் கொள்ளவதுடன் பெற்றோர்கள் அதன் விளைவுகள் பற்றி பிள்ளைகளிடத்தில் புரிய வைத்தல் அவசியமான விடயமாகும். தொலைப்பேசிப்; பாவனையை மாணவர்கள் குறைத்துக் சமுகத்தில் உள்ளவர்களால் செய்ய முயன்ற செற்பாடுகளை செய்தல் இன்றைய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கான வழிக்காட்டலின் அவசியமாக உள்ளது. எனவே தான் உலகமயமாக்களின் தாக்கம் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பல நன்மைகளைப் புரிந்தாலும் அவற்றினை தவறான முறைகளில் பயன்படுத்தும் நிலையே அதிகம் காணமுடிகின்றது. அதிகமான மாணவர்களின் இடைவிலகலிலும் தொலைப்பேசி இயந்திர சாதனங்களின் பாவனையும் அவற்றில் தங்களை முழுதாக ஈடுபடுத்திக் கொள்ளும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. தொலைபேசி பாவனையின் பாதகமான விளைவுகளை பற்றிய விழிப்புணர்வுகளை மாணவர்களிடத்தில் ஏற்படுத்துவதுடன் கற்றல் செயற்பாடுகளை எவ்வாறு ஆர்வமுடைய விடயமாக மாற்றலாம் எனவும் எதிர்கால இலக்கு நோக்கம் என்பன பற்றிய விளக்கங்களை மாணவர்களிடத்தில் தோற்றுவிக்க வேண்டிய சமுக பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

ரெங்கராஜ் வினுஜா
கல்வியியல் சிறப்பு கற்கை,
இரண்டாம் வருடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம். ;