இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது...





மட்டக்களப்பு நகரில் 5.7 மில்லியன் ரூபா செல்வில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவிப்பு.

எமது நாட்டில் தற்போது நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை பார்க்கின்ற போது இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஜனநாயக முறையில் நடந்து கொள்கின்றார்களா? என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.


இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மட்டக்களப்பு பேருந்து நிலைய சந்திக்கு அருகாமையில் தரிசாக இருக்கும் காணியில் பூங்கா அமைப்பதற்கான பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட போது பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் மாநகர முதல்வரின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டின் மூலம் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக சுமார் 18 மில்லியன்கள் செலவில் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அவற்றில் ஒரு செயற்பாடாக இப்பூங்கா 5.7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் மாநகரசபைப் பிரதி முதல்வர் சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களான சண்முகலிங்கம், மதன், பிலிப், பூபாளராஜா, ராஜேந்திரன், ஜெயந்திரகுமார், கிருரஜன், அசோக், பாக்கியநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன் போது மாநகர முதல்வர் மேலும் தெரிவிக்கையில்,

எப்போதும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்களும் ஜனநாயக முறையில் நடக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தினால் பாராளுமன்றம் மிகவும் அமைதியாகவும், கௌரவமாகவும் நடைபெறும். இதனை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் மனதில் நிறுத்தி எமது நாடு ஜனநாயக நாடு என்பதை உலகுக்குத் தெரியப்படுத்துவதற்கான தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை பார்க்கின்ற போது இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஜனநாயக முறையில் நடந்து கொள்கின்றார்களா? என்பதில் சந்தேகம் இருக்கின்றது. எனவே இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் நியாயமான, ஜனநாயக முறையில் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.